சீனாவும் இன்னமும் முழுதும் மீளவில்லை: கரோனா பாசிட்டிவ் ஆனால் எந்த ஒரு நோய் அறிகுறிகளும் இருக்காது-  புதிய அச்சுறுத்தல்

சீனாவும் இன்னமும் முழுதும் மீளவில்லை: கரோனா பாசிட்டிவ் ஆனால் எந்த ஒரு நோய் அறிகுறிகளும் இருக்காது-  புதிய அச்சுறுத்தல்

Published on

சீனாவில் புதிதாக 42 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதில் 38 பேர் அயல்நாட்டிலிருந்து வந்தவர்கள். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை சீனாவில் 81,907 ஆக அதிகரிப்பு.

இதனையடுத்து கோவிட்-19லிருந்து விடுபட்டவர்கள், குணமடைந்தவர்களுக்கு மீண்டும் பரிசோதனைகள் அங்கு தொடங்கப்பட்டுள்ளன. இரண்டாம் அலை எச்சரிக்கையை நேற்று அதிபர் ஜீ ஜின்பிங் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கரோனா பாசிட்டிவ் ஆனால் எந்த வித நோய் அறிகுறியும் தென்படாதவர்கள் எண்ணிக்கை 47 ஆக உள்ளது, இதிலும் 14 பேர் அயல்நாட்டிலிருந்து சீனா திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு கரோனா பாதிப்பும் புதிதாக 4 பேருக்கு தொற்றியுள்ளதாக சீன சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து மீண்டும் ஸ்க்ரீனிங், டெஸ்ட்டிங் அங்கு தொடங்கியுள்ளது.

மேலும் வூஹான் கரோனா மையத்தின் 76 நாட்கள் முழு அடைப்பை சீனா அகற்றியதும் கரோனா பரவல் அச்சத்தை அங்கு ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஹூபேயில் ஒருவர் கரோனாவுக்கு வெள்ளிக்கிழமையன்று மரணமடைந்தார், இதனையடுத்து பலி எண்ணிக்கை சீனாவில் 3,336 ஆக அதிகரித்துள்ளது. 77,455 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் கரோனா பாசிட்டிவ் ஆனால் நோய் குறிகுணங்கள் இல்லாதவர்கள் எண்ணிக்கை 1097 ஆக அதிகரித்துள்ளது, இதிலும் 349 பேர் அயல்நாட்டிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

அசிம்ப்டோமேடிக் கரோனா கேஸ்கள் என்றால் கரோனா இருப்பது உறுதியாகி ஆனால் இருமல், காய்ச்சல், தொண்டைக்கட்டு ஆகியவை இல்லாமல் இருப்பது என்று பொருள்.

வியாழக்கிழமை நிலவரப்படி ஹாங்காங்கில் 973 உறுதி செய்யப்பட்ட கரோனா தொற்றுகளும், 4 மரணங்களும் ரிப்போர்ட் செய்யப்பட்டுள்ளன. தய்வானில் 5 மரணங்கள் உட்பட பாதிப்பு எண்ணிக்கை 380.

இதனையடுத்து புதிய நடைமுறையாக சீனாவில் கரோனாவிலிருந்து மீண்டவர்கள் மீண்டும் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். இப்படி குணமடைந்து தனிமையில் இருப்பவர்கள் தினமும் உடல் வெப்ப நிலையை கண்காணிக்க வேண்டும். மூச்சுக்குழல் பிரச்சினைகளையும் கவனிக்க வேண்டும்.

மேலும் சளி மாதிரிகள் பரிசோதிக்கப்பட வேண்டும். சளி மாதிரிகள்தான் கோவிட்-19 பரிசோதனையில் முக்கியமானது என்று சீன மருத்துவர்கள் கூறுகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in