Last Updated : 29 Aug, 2015 10:17 AM

 

Published : 29 Aug 2015 10:17 AM
Last Updated : 29 Aug 2015 10:17 AM

பதற்றம் நிறைந்த வங்கதேசம் - 16

2008 இறுதியில் வங்கதேசத்தில் நடந்த பொதுத் தேர்தலில் அவாமி லீக் பெரும் வெற்றி பெற்றது. 300 நாடாளுமன்றத் தொகுதிகளில் 250-ல் அந்தக் கட்சி வென்றது. ஹஸீனா மீண்டும் பிரதமர் ஆனார். இதற்கிடையே வேறொரு பழைய வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

அதாவது ‘‘1971-ல் வங்க தேசத்தை சுதந்திர நாடு என்று முதலில் அறிவித்தது யார்? முஜிபுர் ரஹ்மானா அல்லது ஜியாவா?’’ என்ற கேள்விக்கான விடை.

இது ஒரு விதத்தில் ஆழமில்லாத பட்டிமன்றக் கேள்வி. ஏனென்றால் அப்போது இவர்கள் இருவருமே ஒரே அணியில் அணுக்கமாக இருந்தவர்கள். ஆனால் காலப்போக்கில் முஜிபுரின் மகள் ஹஸீனாவும், ஜியாவின் மனைவி கலீதாவும் அரசியலில் நேரெதிர் துருவங்களாக உருவாகி விட்டதால் மேற்படி கேள்வி முக்கியமானதாகி விட்டது. இது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் ஆற, அமர 2009-ல் ஒரு தீர்ப்பை அளித்தது. ‘வங்கதேச சுதந்திரப் பிரகடனத்தை முதலில் செய்தவர் முஜிபுர் ரஹ்மான்’என்று அறிவித்தது.

பொதுத் தேர்தல்களை நடுநிலை யான தாற்காலிக அரசுதான் நடத்த வேண்டும் என்ற சட்டம் வங்கதேசத்தில் இருந்தது. அதாவது ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு நடுநிலையான ஒருவரிடம் பிரதமர் ஆட்சியை ஒப்படைக்க அவர்தான் தேர்தலை வழி நடத்துவார். இந்தச் சட்டத்தை நீக்கியது ஹஸீனா அரசு.

பழிவாங்கும் நிகழ்ச்சிகள் தொடர்கதை ஆயின. ராணுவத்தை மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருக்க வேண்டிய கட்டாயம் அடுத்தடுத்த ஆட்சிகளுக்கு இருந்தது. பிற நாடுகளிலிருந்து தேசத்தைக் காப்பாற்றத்தான் ராணுவம் என்பதுபோக, தங்கள் ஆட்சியை ராணுவம் கவிழ்த்துவிடக் கூடாதே என்ற எச்சரிக்கையும், பயமும்தான் வங்கதேச அரசுகளுக்கு இருந்து வந்திருக்கின்றன. கடந்த கால கசப்பான அனுபவங்களின் விளைவு.

ஹஸீனா அரசு ராணுவ ‘களை யெடுப்பில்’ மிகுந்த முனைப்பு காட்டியது. 1971 சுதந்திரப் போராட் டத்தின்போது பாகிஸ்தானுடன் இணைந்து உள்குத்து வேலை களைச் செய்தார்கள் என்று கூறி சில ராணுவ அதிகாரிகளை 2012-ல் தூக்கிலிட்டனர்.

2012ல் ஃபேஸ்புக்கில் பாதி எரிக்கப்பட்ட குரானின் படம் வெளியானது. புத்த மதத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன்தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்று தெரியவர, முஸ்லிம் கிளர்ச்சியா ளர்கள் வெகுண்டெழுந்தனர்.

தவறுதலாக அந்தப் படம் இணைக்கப்பட்டுவிட்டதாக அந்த புத்தமதச் சிறுவன் கூற, உடனடியாக அந்த முகநூல் பக்கம் நிறுத்தப்பட்டது. சிறுவனும் அவன் குடும்பமும் பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பப்பட்டனர்.

ஆனால் அதற்குள் நிலைமை கைமீறிவிட்டது. புத்தமதத்தினர் அதிகம் வசிக்கும் கிராமங்களை முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் தாக்கத் தொடங்கினார்கள். பத்து புத்த ஆலயங்கள் நொறுக் கப்பட்டன.

2014 ஜனவரி தேர்தலில் எதிர்க் கட்சியான வங்கதேச தேசியக் கட்சி பங்கெடுத்துக் கொள்ளவில்லை. நடுநிலையான ஓர் அமைப்பு தேர்தலை நடத்தினால்தான் அது நியாயமான தேர்தலாக இருக்கும் என்று கூறி நாடாளுமன்றத் தேர்தலில் கலீதாவின் கட்சி போட்டியிடாமல் போக, மூன்றாவது முறையாக பிரதமர் ஆனார் ஹஸீனா.

இப்படி மாறி மாறி அரசியல் ஸ்திரத் தன்மை கேள்விக்குறி யாகிவரும் நாடாக வங்கதேசம் இருந்து வருகிறது. ஹஸீனா, கலீதா ஆகிய இருவரின் ஆட்சி களிலும் ஊழல், அடக்குமுறை, பழிவாங்கும் எண்ணம், ஒருதலைப்பட்ச செயல்முறைகள் போன்றவை காணப்பட்டாலும் அந்த நாட்டில் ஜனநாயகம் ஓரளவாவது இருப்பதற்குக் காரணமும் இவர்கள்தான்!

உலகின் மிக நெரிசலான நாடுகளில் ஒன்று வங்கதேசம். கல்வி அறிவு பெற்றவர்கள் ஐந்தில் ஒரு பங்கு மட்டும்தான். கட்டாயக் கல்வி எல்லாம் கிடையாது. தெற்கு ஆசியாவின் வேறு எந்த நாட்டை யும்விட வங்கதேசத்தில் நகரவாசிகள் மிகக் குறைவு. மொத்த மக்கள் தொகையில் பத்து சதவீதம் கூட நகரங்களில் வசிப்பதில்லை.

அவர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தும் சில விஷயங்களில் ஒன்று கிரிக்கெட்.

ஆரம்ப கட்டத்தில் வங்கதேச மக்களின் முக்கியப் பொழுதுபோக்கு கால்பந்தாக இருந்தது. இப்போது கிரிக்கெட் முதலிடத்தைப் பிடித்து விட்டது.

வங்காளத்தில் கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தியது கிழக்கிந் தியக் கம்பெனிதான். முதல் கிரிக்கெட் மேட்ச் அங்கு 1792-ல் நடைபெற்றது. 1934-லிருந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரஞ்சிக் கோப்பை பந்தயங்களை நடத்த தொடங்கியது. இதில் 1938 39 சீசனில் கோப்பையை வென்றது வங்காள அணி.

வங்காளம் பிரிக்கப்பட்டபின் கிழக்கு வங்காளத்தில் அதிகார பூர்வமான கிரிக்கெட் பந்தயங்கள் பல வருடங்களுக்கு ஆடப்படவில்லை. அதன் பிறகு கிழக்குப் பாகிஸ்தான் என்று பெயர் சூட்டிக் கொண்ட பாகிஸ்தானின் பகுதி உயர்மட்ட கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கு கொள்ளத் தொடங்கியது.

டாக்காவிலுள்ள வங்கபந்து (முஜிபுர் ரஹ்மானின் பட்டப் பெயர் இது) தேசிய மைதானம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட பயன் படுத்தப்பட்டது. 1955ல் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மோதல் இங்கு நடைபெற்றது.ஒரு முழுமை யான தனி நாடாக கிரிக்கெட் போட்டிகளில் பங்களாதேஷ் பங்கு பெற்றது 1972-லிருந்துதான் பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப் பாடு வாரியம் 1974-ல் உருவாக் கப்பட்டது.

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் பந்தய மோதலுக்கு இணையான விதத்தில் எதிர்பார்க்கப்பட்டது 1986 மார்ச் 31 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கிரிக்கெட் போட்டி. எதிர்த்து விளையாடிய அணி - பாகிஸ்தான்! ஏழு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வென்றது.

பல வருடங்களுக்குப் பிறகு 1999 கிரிக்கெட் உலகக் கோப்பைப் பந்தயத்தில் வங்கதேச அணி பாகிஸ்தான் அணியை வென்றது. அது பலத்த அதிர்ச்சி அலைகளை எழுப்பியது.

மற்றபடி பாகிஸ்தான் பங்களா தேஷ் உறவுகள் இப்போது எப்படி உள்ளன என்று பார்ப்போமா?

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x