

வடக்கு கலிபோர்னியாவைச் சேர்ந்த 53 வயது பெண்மணி ஒருவர் சவுத் லேக் தஹுவில் உள்ள சேஃப்வே என்ற ஸ்டோரில் மளிகைப் பொருட்களை நக்கி சேதப்படுத்தியதற்காகவும், கரோனா வைரஸ் காலத்தில் தொற்று பரவும் விதமாக இதைச் செய்ததற்காகவும் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
சுமார் 1,800 டாலர் மதிப்புடைய பொருட்களை இனி யாருக்கும் விற்க முடியாத வகையில் இந்தப் பெண் அவற்றை நக்கிச் சேதப்படுத்தியதான புகாரில் ஸ்டோருக்கு போலீஸ் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். இதனையடுத்து மோசடி அழித்தொழிப்பு புகாரில் இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
தன் ஷாப்பிங் கார்ட்டில் அவர் வைத்திருந்த பொருட்களெல்லாம் எச்சிலால் சேதமடைந்துள்ள நிலையில் அவற்றை விற்க முடியாது என்று ஸ்டோர் நிர்வாகிகள் போலீஸாரிடம் புகார் செய்தனர்.
அதிகாரிகள் ஸ்டோருக்குள் வரும் போது ஸ்டோரிலிருந்து அவர் சில நகைகளையும் எடுத்து நாவால் நக்கியுள்ளது தெரியவந்தது, இவர் இவ்வாறு இறைச்சி, மதுபானம், நகைகள் உள்ளிட்ட பொருட்களுடன் மளிகை சாமான்களையும் நக்கியுள்ளார், இவற்றை வாங்குவதற்கு இவரிடம் போதிய பணம் இல்லை என்று கூறப்படுகிற்து.
அவர் நக்கிய பொருட்கள் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக அழிக்கப்பட்டுள்ளன.
இவரைக் கைது செய்த போலீஸார் இவருக்கும் போலீஸுக்கும் இதுவரை தொடர்பு எதுவும் இல்லை ஆனாலும் இவரை நிறைய முறை பார்த்திருப்பதாக போலீஸ் அதிகாரி ஷனான் லேனி தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.