கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க களமிறங்கிய இங்கிலாந்து அழகி

பாஷா முகர்ஜி
பாஷா முகர்ஜி
Updated on
1 min read

கரோனா வைரஸால் பாதிப்படைந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மீண்டும் டாக்டர் பணியைத் தொடங்கியுள்ளார் 2019-ம் ஆண்டு மிஸ் இங்கிலாந்து பட்டம் வென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த பாஷா முகர்ஜி.

இந்தியாவில் பிறந்த பாஷா முகர்ஜிக்கு 9 வயதாக இருக்கும்போதே அவரது குடும்பம் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தது. இந்நிலையில் பாஷா முகர்ஜி கடந்த2019-ம் ஆண்டில் மிஸ் இங்கிலாந்து போட்டியில் பங்கேற்று பட்டம் வென்றார்.

இதைத் தொடர்ந்து லண்டன் அருகிலுள்ள பில்கிரிம் மருத்துவமனையில் ஜூனியர் மருத்துவராக பணியாற்றத் தொடங்கினார். பின்னர் சில காரணங்களுக்காக மருத்துவராக அவரால் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. எனினும், பல தொண்டு நிறுவனங்களுக்கு தூதுவராக இருந்து பல்வேறு நாடுகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.

தற்போது கரோனா வைரஸின் பாதிப்பு உலக அளவில் அதிகரித்து வருவதால் மீண்டும் டாக்டர் பணியைத் தொடங்க முடிவு செய்தார் பாஷா முகர்ஜி. இங்கிலாந்தில் அவர் ஏற்கெனவே பணி புரிந்த மருத்துவமனையிலேயே டாக்டராக பணியாற்ற முடிவு செய்துள்ளார்.

டாக்டர் பணி

சுமார் 2 வாரங்கள் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டு தன் உடல்நிலை சரியாக இருப்பதையும் தெளிவுபடுத்திக்கொண்டு டாக்டர் பணியில் அவர் இறங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “இங்கிலாந்து தற்போது மிக மோசமான நிலையில் உள்ளது. அந்த மோசமான காலத்தில் இங்கிலாந்துக்கு உதவ நான் முன்வராவிட்டால் மிஸ் இங்கிலாந்து பட்டம் பெற்றதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும். எனவேதான் டாக்டர் பணியை மீண்டும் தொடங்கினேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in