Last Updated : 08 Apr, 2020 01:36 PM

 

Published : 08 Apr 2020 01:36 PM
Last Updated : 08 Apr 2020 01:36 PM

மோடி பெரிய மனிதர்; 2.9 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை இந்தியாவிலிருந்து வாங்கினோம்: ட்ரம்ப் திடீர் பாராட்டு

பிரதமர் மோடியுடன், அதிபர் ட்ரம்ப் : கோப்புப்படம்

வாஷிங்டன்

கரோனா வைரஸ் நோயாளிகளின் உயிர்காக்கும் மருந்தாக இருக்கும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை நாங்கள் இந்தியாவிலிருந்து 2.90 கோடி எண்ணிக்கையில் வாங்கியிருக்கிறோம். பிரதமர் மோடி மிகப்பெரிய மனிதர் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.

அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி செய்ய, இந்தியா மறுத்தால் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும், பதிலடி கொடுப்போம் என இரு நாட்களுக்கு முன் மிரட்டல் விடுத்த ட்ரம்ப், நேற்று பல்டியடித்துள்ளார்.

மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்தாக வழங்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடந்த மாதம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரைக்குப் பின், இந்த மாத்திரைகளின் ஏற்றுமதியை மத்திய அரசு கடந்த மாதம் 25-ம் தேதி தடை செய்தது.

ஆனால், கரோனா வைரஸால் 4 லட்சம் மக்களுக்கு மேல் பாதிப்பையும், 12 ஆயிரத்துக்கு மேல் உயிரிழப்பையும் சந்தித்த அமெரிக்கா அதிக அளவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை இந்தியாவிடம் ஆர்டர் செய்திருந்தது.

மத்திய அரசின் தடையால் அந்த மாத்திரைகள் அமெரிக்காவுக்குக் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. இதனால் பிரதமர் மோடியிடம் தடையை விலக்கும்படி ட்ரம்ப் கடந்த வாரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு விலக்கவில்லை.

இதனால் ட்ரம்ப், “ இந்தியா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைக்கான ஏற்றுமதித் தடையை விலக்காதது வியப்பளிக்கிறது. எதிர்காலத்தில் பதிலடி கொடுப்போம்” என மிரட்டும் விதத்தில் தெரிவித்திருந்தார்.

ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்த சில மணிநேரங்களில், மனிதநேய அடிப்படையில் தேவைப்படும் நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசும் அறிவித்தது.

இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது இந்தியாவிடம் இருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் அனுப்பி வைக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ட்ரம்ப் பதில் அளிக்கையில், “லட்சக்கணக்கான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை நாங்கள் வாங்கியிருக்கிறோம். 2.90 கோடிக்கும் அதிகமான மாத்திரைகள் வாங்கப்பட்டுள்ளன. நான் பிரதமர் மோடியிடம் பேசினேன். இந்தியாவிலிருந்து மிகப்பெரிய அளவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் அமெரிக்காவுக்கு வருகின்றன.

நீங்கள் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய அனுமதித்தால் பெரிய மனிதர் என்றேன். உண்மையில் மோடி பெரிய மனிதர்தான். இந்தியாவுக்கும் அந்த மாத்திரை தேவைப்பட்டதால் அவர்கள் அந்த மாத்திரை ஏற்றுமதியைத் தடுத்து வைத்திருந்தார்கள்” எனத் தெரிவித்தார்.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் தயாரிப்பில் உலக அளவில் இந்தியாதான் முன்னிலையில் இருந்து வருகிறது. உலக அளவில் 70 சதவீதம் சப்ளை இந்தியாவிலிருந்துதான் செல்கிறது என்று இந்தய மருந்து தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x