Last Updated : 08 Apr, 2020 12:13 PM

 

Published : 08 Apr 2020 12:13 PM
Last Updated : 08 Apr 2020 12:13 PM

நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை: கரோனா வைரஸால் இந்தியாவில் 40 கோடி தொழிலாளர்கள் மோசமான வறுமையில் வீழ்வார்கள்; சர்வதேச தொழிலாளர் அமைப்பு கவலை

பிரதிநிதித்துவப் படம்.

நியூயார்க்

உலகை அச்சத்தின் பிடியில் வைத்திருக்கும் கரோனா வைரஸால் இந்தியாவில் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்பட உள்ளது. அமைப்பு சாரா தொழிலில் உள்ள 40 கோடி தொழிலாளர்கள் மேலும் மோசமான வறுமையில் வீழ்வார்கள் என்று ஐநாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) கவலை தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் நடப்பு ஆண்டின் 2-வது காலாண்டில் 19.50 கோடி பேரின் முழுநேர வேலையை கரோனா வைரஸ் பறிக்கும் என எதிர்பார்ப்பதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

’சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2-வது கட்டக் கண்காணிப்பு: கரோனாவும் உலக வேலைவாய்ப்பும்’ என்ற தலைப்பில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இயக்குநர் கெய் ரைடர்

இதுகுறித்து அந்த அமைப்பின் இயக்குநர் கெய் ரைடர் நிருபர்களிடம் கூறியதாவது:

''கரோனா வைரஸ் உலக அளவில் ஏற்படுத்தி வரும் மனிதப் பேரிழப்பும், பொருளதாரச் சீரழிவும் 2-ம் உலகப்போருக்குப் பின் உலக நாடுகள் எதிர்கொள்ளும் தீவிரமான பிரச்சினையாகும்.

வளர்ந்த நாடுகள், வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் உள்ள தொழிலாளர்கள், வர்த்தகம் செய்வோர், சுயதொழில் செய்வோர் பேரழிவைச் சந்திக்கிறார்கள். இந்த நேரத்தில் நாம் வேகமாகவும், ஒற்றுமையாகும கடந்து செல்ல வேண்டும். சரியான, அவசரமான நடவடிக்கைகள்தான் உயிர் வாழ்வற்கும், உயிரிழப்புக்கும் இடையே வேறுபாட்டை உருவாக்கும்.

உலக அளவில் வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்டிருக்கம் நாடுகளில் இருக்கும் அமைப்புசாரா துறையில் இருக்கும் 200 கோடி தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஏற்கெனவே ஒரு கோடி பேர் இதில் சிக்கி அவதிப்பட்டு வருகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

குறிப்பாக கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட நடவடிக்கைகள், லாக்-டவுன் போன்றவற்றால் இந்தியா, நைஜீரியா, பிரேசில் நாடுகளில் அமைப்பு சாரா பொருளாதாரத்தில் உள்ள ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

இந்தியாவில் 90 சதவீதம் மக்கள், அமைப்பு சாரா பொருளாதாரத்தில் பணியாற்றி வருகிறார்கள். இதில் 40 கோடி தொழிலாளர்கள் மேலும் மோசமான வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இப்போது இந்தியாவில் இருக்கும் லாக்-டவுன் நடவடிக்கை அந்தத் தொழிலாளர்களின் பொருளாதாரத்தை மோசமாகப் பாதிக்கும். பலர் வேலையிழந்து கிராமத்துக்கே திரும்புவார்கள்.

கரோனா வைரஸால் உலகப் பொருளாதாரம் பெரும் சீரழிவைச் சந்திக்கும். 6.7சதவீதம் வேலை நேரம், அல்லது 19.5 கோடி வேலைவாய்ப்புகள் 2-ம் காலாண்டில் துடைத்து எறியப்படும்.

கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உலக நாடுகளுக்கு இடையே கூட்டுறவுக்கு வந்துள்ள சோதனையாகும். இதில் ஒரு நாடு தோல்வி அடைந்தால் அனைவரும் தோற்போம். இதற்குத் தீர்வு கண்டறிந்து அனைத்துத் துறைகளுக்கும் உதவ வேண்டும். குறிப்பாக மோசமான, விளிம்பு நிலையில் உள்ள சமூகத்தினரை கைதூக்கி விட வேண்டும்.

அரேபிய நாடுககளில் 50 லட்சம் முழுநேர வேலைவாய்ப்பு, ஐரோப்பாவில் 1.20 கோடி, ஆசியா பசிபிக்கில் 1.25 கோடி வேலைவாய்ப்புகள் கரோனா வைரஸால் பறிபோகும். பல்வேறு வருமானம் ஈட்டும் பிரிவினருக்கும் இந்த கரோனா வைரஸ் பெரும் இழப்பைக் கொடுக்கும்.

அதிக வருமானம் உள்ள நாடுகளில் 10 கோடி பணியாளர்கள் வேலையிழப்பார்கள். 2008-ம் ஆண்டு உலகப் பொருளாதாரச் சிக்கல் போன்று இருக்கும்.

சுற்றுலாத்துறை, உணவகங்கள் துறை, சேவைத்துறை, உற்பத்தி துறை, சில்லறை விற்பனை, நிர்வாக ரீதியான செயல்கள் போன்றவை கடுமையாக கரோனா வைரஸால் பாதிக்கப்படும்.

உலகம் முழுவதும் 125 கோடி தொழிலாளர்கள் பணியாற்றும் துறைகள் மிகவும் இடர்ப்பாடுகளைச் சந்திக்கப்போகிறது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு ஊதியக் குறைப்பு, பணிநேரம் குறைப்பு, தகுதிக்கும் குறைந்த பணி போன்றவை ஏற்படும். 43 சதவீதம் அமெரிக்க மக்களுக்கும், 26 சதவீதம் ஆப்பிரிக்க மக்களுக்கும் இந்தச் சிக்கல் ஏற்படும்''.

இவ்வாறு கெய் ரைடர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x