

கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்திலிலிருந்து ஈரான் கோரியுள்ள கடனைத் தடுப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
மத்தியக் கிழக்கு நாடுகளில் கரோனா வைரஸால் ஈரான் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளது. ஈரானில் கரோனா வைரஸுக்கு இதுவரை 62,589 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
அமெரிக்கா அளிக்கவிருந்த மருத்துவ உதவிகளை ஈரானின் மூத்த மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி மறுத்துவிட்டார்.
இதற்கிடையில் கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தை எதிர்கொள்ள சர்வதேச நாணய நிதியத்திலிருந்து கடன் பெறும் முயற்சியில் ஈரான் இறங்கியுள்ளது.
இந்த நிலையில் மனிதாபிமான உதவிகளுக்கு வழங்கப்படும் நிதியை சுய தேவைக்கும், பயங்கரவாதத்திற்கும் ஈரான் பயன்படுத்தியதாக நீண்ட வரலாறு உண்டு என்று கூறி ஈரானுக்கு கடன் வழங்க அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து ஈரான் தரப்பில் இதுவரை பதிலளிக்கப்படவில்லை.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் சுமார் 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 82,096 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், சீனா ஆகிய நாடுகள் கரோனா வைரஸால் அதிகம் பாதிப்பைச் சந்தித்துள்ளன.