Last Updated : 08 Apr, 2020 10:20 AM

 

Published : 08 Apr 2020 10:20 AM
Last Updated : 08 Apr 2020 10:20 AM

நியூயார்க்கில் கவலையளிக்கும் உயிரிழப்பு: இரட்டைக் கோபுரத் தகர்ப்பின் போதான பலியைக் காட்டிலும் கரோனா வைரஸால் அதிகம்

கரோனா வைரஸின் கொடிய பார்வையில் அமெரிக்கா கடுமையாகப் பாதிக்கப்பட்டாலும், அதில் பெரும்பகுதி உயிர்ச் சேதம், பாதிப்பு இரண்டிலும் நியூயார்க் நகரத்துக்குத்தான் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நியூயார்க்கில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தபோது 2,977 பேர் உயிரிழந்தனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதைக் காட்டிலும் கரோனா வைரஸால் அதிகமானோர் நியூயார்க் நகரில் இப்போது உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கரோனா வைரஸின் பாதிப்பு உச்ச கட்டத்தில் இருக்கிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 1,970 பேர் உயிரிழந்து ஒட்டுமொத்த உயிரிழப்பு 12 ஆயிரத்து 841 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சமாக அதிகரித்துள்ளது. 33 ஆயிரம் பேருக்கு நேற்று கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

இதில் நியூயார்க் மாநிலத்தில் மட்டும் இதுவரை கரோனா வைரஸுக்கு 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக மாநில ஆளுநர் ஆண்ட்ரூ குமோ தெரிவித்துள்ளார். இதில் நேற்று ஒரேநாளில் மட்டும் நியூயார்க் நகரில் 731 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 5 ஆயிரத்து 489 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா வைராஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 836 ஆக அதிகரித்துள்ளது. இதில் நியூயார்க் நகரில் மட்டும் 3 ஆயிரத்து 485 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இரட்டைக் கோபுரம் தாக்குதலின்போது கொல்லப்பட்ட மக்களைக் காட்டிலும் இப்போதுதான் அதிகம்.
அமெரிக்காவில் இதுவரை 12, ஆயிரத்து 841 பேர் கரோனா வைரஸால் உயிரிழந்த நிைலயில் அதில் பாதிக்கும் அதிகமானோர் நியூயார்க் மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர்.

நியூயார்க் மாநில ஆளுநர் ஆண்ட்ரூ குமோ கூறுகையில், “ நியூயார்க் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 731 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு உயிரிழப்பு நடந்துள்ளது. ஒட்டுமொத்தமாக உயிரிழப்பு 5,500க்கு மேல் அதிகரித்துள்ளது எனக்கும், நியூயார்க் மக்களுக்கும் மிகுந்த வலியையும், வேதனையையும் தருகிறது.

அதேசமயம், இதில் ஆறுதல் அளிக்கும் விஷயம் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கையும், செயற்கை சுவாசம் பெறுபவர்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வலியுறுத்தி வந்தது பலன் அளிக்கத் தொடங்கிவிட்டது.

ஏராளமான போக்குவரத்து சேவைகளை நியூயார்க் நகரில் குறைத்துவிட்டோம். மக்கள் பொதுவெளியில் அதிகமான இடைவெளி விட்டு நிற்கிறார்கள். சிலர் மட்டுமே முகக்கவசம் இல்லாமல் இருக்கிறார்கள். இருப்பினும் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. டெட்ராய்ட், நியூ ஓரிலீன்ஸ், நியூயார்க் மெட்ரோ பகுதி, லாங் ஐலாந்து, நியூ ஜெர்ஸி, கனெக்ட்கட், நியூயார்க் சிட்டி ஆகியவை இன்னும் கரோனா வைரஸின் ஹாட் ஸ்பாட்களாக இருக்கின்றன” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x