

கரோனா வைரஸ் தொடர்பான உண்மைகளை சீன அரசு மறைத்துவிட்டதாக உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.
எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ் உலக சுகாதார அமைப்பின் தலைவராக உள்ளார். சீனாவின் உதவியுடன் அவர் இந்த பதவியை பெற்றதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவோடு சேர்ந்து உலக சுகாதார அமைப்பும் உண்மைகளை மறைத்துவிட்டதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்த குற்றச்சாட்டை மறுத்து வரும் சீன அரசு, கரோனா வைரஸ் தொடர்பான தேதி வாரியான விவரங்களை வெளியிட்டுள்ளது. கடந்த டிசம்பர் இறுதியில் வூஹான் நகரில் கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தொடர்பான விவரங்கள் உலக சுகாதார அமைப்பிடம் நாள்தோறும் விவரிக்கப்பட்டது. அமெரிக்காவிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு முழுமையாக விவரங்கள் தெரிவிக்கப்பட்டன என்று சீன அரசு விளக்கம் அளித்துள்ளது.
"உலகளாவிய அளவில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த சீன அரசு திட்டமிட்டு கரோனா வைரஸை பரவ செய்துள்ளது" என்று பிரேசில் கல்வி அமைச்சர் ஆபிரகாம் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.