Published : 08 Apr 2020 06:32 AM
Last Updated : 08 Apr 2020 06:32 AM

கரோனா தொற்றால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குணமடைய உலக தலைவர்கள் வாழ்த்து

போரிஸ் ஜான்சன்

லண்டன்

உலக நாடுகள் அனைத்துக்கும் கரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. பிரிட்டனை பொறுத்தவரை அங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நோய் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், அவரது உடல்நிலை நேற்று சற்று மோசமானதாக கூறப்படுகிறது. இதையடுத்து, லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் விரைவில் குணமடைய வேண்டி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், "மருத்துவமனையில் இருந்து பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அன்று உங்களை நேரில் சந்திக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் வாழ்த்துச் செய்தியில், "எனது நெருங்கிய நண்பர் போரிஸ் ஜான்சன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து மிகுந்த கவலை அடைந்திருக்கிறேன். அவர் விரைவில் நலம் பெற வேண்டி நானும், அமெரிக்க மக்களும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், ஸ்பெயின்பிரதமர் பெட்ரோ சான்ஸேஸ், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே உள்ளிட்ட பல தலைவர்கள் போரிஸ் ஜான்சனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

76 ஆயிரம் பேர் உயிரிழப்பு

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 லட்சத்தை நெருங்குகிறது. நேற்று வரை76,373 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.68 லட்சமாக உயர்ந்துள்ளது. ஒரேநாளில்1,321 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை11,000 ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x