

இத்தாலியில் மிகப் பெரிய உயிரிழப்புகளுக்குப் பிறகு பலி எண்ணிக்கை கணிசமான அளவில் கடந்த சில நாட்களாகக் குறைந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைப்பு கூறும்போது, “இத்தாலியில் கடந்த இரு வாரங்களை ஒப்பிடும்போது இறப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. திங்கட்கிழமை கரோனா வைரஸுக்கு 635 பேர் பலியாகினர். அதற்கு முந்தைய தினம் 525 பேர் பலியாகினர். கடந்த மார்ச்15 ஆம் தேதிக்குப் பிறகு கடந்த இரண்டு நாட்களாக இறப்பு விகிதம் குறைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.
இத்தாலியில் கரோனா வைரஸுக்கு 1,32,547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,523 பேர் பலியாகியுள்ளனர். 22 ஆயிரத்து 837 பேர் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்துள்ளனர்.
ஒரு மாதமாக கரோனா வைரஸுக்கு உயிரிழப்புகள் அதிகரித்த நிலையில், கடந்த சில நாட்களாக இத்தாலியில் உயிரிழப்பு குறைவு, பாதிப்பு குறைவு, குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவை இத்தாலி மக்களுக்கு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் ஊரடங்கை நீக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தாலியில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் சுமார் 13 லட்சத்து 47 ஆயிரத்து 235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 74 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான் ஆகிய நாடுகள் கரோனா வைரஸால் அதிகம் பாதிப்பைச் சந்தித்துள்ளன. இதில் ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் உயிரிழப்புகள் 11,000 -ஐக் கடந்துள்ளது.
அமெரிக்காவில் மட்டும் 3,67,629 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,000 பேர் வரை பலியாகியுள்ளனர்.