

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதுவரை 70,356 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா வைரஸின் மையப்புள்ளியாக அமெரிக்கா மாறியுள்ளது. அந்த நாட்டில் நேற்று முன்தினம் 25,607 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,37,646 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்கா முழுவதும் நேற்று முன்தினம் 1,134 பேர்வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 9,662 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிருபர்களிடம் கூறும்போது, "இதுவரை 16 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் கரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருக்கக்கூடும்" என்றார்.
புலிக்கு வைரஸ் தொற்று
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உயிரியல் பூங்கா ஊழியருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அவர் மூலம் அங்குள்ள பெண் புலிக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து இதர புலிகள், சிங்கங்களுக்கும் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டனில் நேற்று முன்தினம் 5,903 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த நாட்டில் 48,388 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் 621 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 4,934 ஆக உயர்ந்துள்ளது.
பிரதமருக்கு செயற்கை சுவாசம்
கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமானதால் லண்டனில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குழுவின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார்.
பிரிட்டிஷ் ராணி எலிசபெத் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் "கரோனா வைரஸுக்கு எதிரான போரில் பிரிட்டன் வெற்றி பெறும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஸ்பெயினில் உயிரிழப்பு 13,055 ஆகவும் வைரஸ் பாதிப்பு 1,35,032 ஆகவும் அதிகரித்திருக்கிறது. இத்தாலியில் உயிரிழப்பு 15,887 ஆகவும் வைரஸ் பாதிப்பு 1,28,948 ஆகவும் உள்ளது. இரு நாடுகளிலும் முழுமையான ஊரடங்கு அமல்செய்யப்பட்டிருப்பதால் உயிரிழப்பும் வைரஸ் தொற்றும் குறைந்து வருகிறது.
ஜெர்மனியில் ஒரு லட்சம் பேரும்பிரான்ஸில் 90 ஆயிரம் பேரும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று மாலை நிலவரப்படி 12 லட்சத்து 86 ஆயிரத்து 409 ஆக உயர்ந்தது. இதுவரை 70,356 பேர் உயிரிழந்துள்ளனர்.