

அமெரிக்காவின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் சிகாகோ பல்கலைக்கழகமும் ஒன்றாகும். இந்த பல்கலைக்கழகத்தில் சீன அரசியல் துறை பேராசிரியராகப் பணியாற்றி வரும் டாலி யாங், 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
கடந்த டிசம்பர் இறுதியில் வூஹானில் கரோனா வைரஸ் பரவியது குறித்து அந்த நகர மருத்துவர்கள் ஹுபெய் மாகாண நிர்வாகத்துக்கு தகவல் அளித்தனர். அதன்பிறகு என்ன நடந்தது?
சீனாவில் ஒவ்வொரு மாகாணத்துக்கும் நோய் தடுப்பு மையம்(சிடிசி) உள்ளது. இதேபோல மாகாணத்தின் ஒவ்வொரு பகுதியிலும் சுகாதார ஆணை யங்கள் செயல்படுகின்றன. சுகா தாரம் சார்ந்த பிரச்சினைகள் உடனடியாக தேசிய அளவில் எடுத்துச் செல்லப்படாது. மாகாண சிடிசி அமைப்பே பிரச்சினைகளை கையாளும்.
மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு கரோனா வைரஸ் பரவாது என்று ஹுபெய் சிடிசி கடந்த டிசம்பர் 31-ம் தேதி அறிக்கை வெளியிட்டது. இது மாபெரும் தவறு. உண்மை தகவல்களை வெளியிட்ட மருத்துவர்கள் ஒடுக்கப்பட்டார்கள். இதுவும் மிகப்பெரிய தவறு. ஆரம்ப கால கட்டத்தில் கரோனா வைரஸ் பிரச்சினையை மூடி மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
கரோனா வைரஸ் பிரச்சினையை மூடி மறைத்தது யார்?
இது ஒரு அரசியல் விவகாரம். முதல் சில வாரங்களில் வூஹானில் எந்த பிரச்சினையும் இல்லை என்றே உள்ளூர் அரசு நிர்வாகம் கூறிவந்தது. ஜனவரி 16-ம் தேதி வரை யாருமே கரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. எனினும் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த தேசிய நோய் தடுப்பு மையம் கடந்த ஜனவரியில் உலக சுகாதார அமைப்பிடம் தகவல் தெரிவித்தது. கடந்த ஜனவரி 12-ம் தேதி வைரஸின் மரபணு உலக சுகாதார அமைப்பிடம் அளிக்கப்பட்டது.
முதல் 2 வாரங்கள் யாருமே கரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்று கூறியது ஏன்?
வூஹான் மீன் சந்தையோடு தொடர்புடையவர்களுக்கே கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த சந்தையோடு தொடர்பு இல்லாமல் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்களை முதலில்கணக்கில் எடுத்து கொள்ளவில்லை. மேலும் வூஹான் மாநகராட்சி நிர்வாகம், நோயாளிகளின் எண்ணிக்கையை குறைத்து காட்ட முயற்சித்தது. இது தவறான வழிகாட்டுதல்.
தேசிய தலைமை எவ்வாறு செயல்பட்டது?
கடந்த டிசம்பர் 31-ம் தேதி தேசிய தலைமை, வூஹானுக்கு ஒரு குழுவை அனுப்பியது. இந்த குழு பல நாட்கள் வூஹானில் தங்கியிருந்து ஆய்வு செய்தது. ஜனவரி மத்தியில் மேலும் ஒரு குழுவை தேசிய தலைமை அனுப்பியது. கரோனா வைரஸ் பிரச்சினை தீவிரமானதால் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டையும் தேசிய தலைமை ஏற்றுக் கொண்டது.
கரோனா வைரஸ் பிரச்சினையை எவ்வாறு சமாளித்தீர்கள்?
வூஹானில் 90 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அந்த நகரில் துணிச்சலாக ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. ஆனால் ஊரடங்குக்கு முன்பாக 50 லட்சம் பேர் நகரை விட்டு வெளியேறி விட்டார்கள். இதனால்தான் வேறு சில பகுதிகளிலும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஜனவரி 17-ல் சீன அதிபர் ஜி ஜின்பிங் மியான்மர் சென்றது ஏன்?
சீனாவின் ஒரு பகுதியில் கரோனா வைரஸ் பிரச்சினை ஏற்பட்டதற்காக ஒட்டுமொத்த நாட்டின் செயல்பாட்டையும் முடக்க முடியாது. மியான்மர் சுற்றுப்பயணம் ஏற்கெனவே திட்டமிடப்பட்டது. அதன்படியே ஜனவரி 17-ம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங் மியான்மர் சென்றார்.
கடந்த ஜனவரி 13-ம் தேதி தாய்லாந்தில் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அவருக்கும் வூஹான் மீன் சந்தைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. அதன்பிறகே உலக நாடுகள் தரப்பில் சீனாவுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டது.
வைரஸை கட்டுப்படுத்த சீன நோய் தடுப்பு மையம் தாமதமாக செயல்பட்டது ஏன்?
கரோனா வைரஸின் ஆபத்து குறித்து கடந்த ஜனவரி 6-ம் தேதியே சீன நோய் தடுப்பு மையம் எச்சரிக்கை விடுத்தது. உண்மையை மறைத்ததில் அரசியல் தலையீடு இருந்தது உண்மைதான். சீன நோய் தடுப்பு மைய பொது இயக்குநர் கோவ் பூ தன்னிச்சையாக செயல்பட முடியாது. அவருக்கு சில கட்டுப்பாடுகள் இருந்தன. சீனாவை பொறுத்தவரை தேசியசுகாதார ஆணையமே வலுமிக்க அமைப்பாகும். கரோனா வைரஸ் பெருந்தொற்று என்பதை மருத்துவர்கள் உட்பட யாருமே சொல்லவில்லை என்பது உண்மைதான். இது மிகவும் துரதிருஷ்டவசமானது.
- ஆனந்த் கிருஷ்ணன்