Last Updated : 06 Apr, 2020 01:03 PM

 

Published : 06 Apr 2020 01:03 PM
Last Updated : 06 Apr 2020 01:03 PM

கரோனா போரில் வெற்றி பெறுவோம்; நல்ல காலம் வரும்; நாம் மீண்டும் சந்திப்போம்: 8 ஆண்டுகளுக்குப் பின் பிரிட்டன் மக்களுக்கு ராணி எலிசபெத் உரை

பிரிட்டன் ராணி 2-ம் எலிசபெத் மக்களுக்கு உரையாற்றிய காட்சி : படம் உதவி | ட்விட்டர்

லண்டன்

போர்க்காலத்தில் நாம் பின்பற்றும் சுய ஒழுக்கத்தைப் பின்பற்றி கரோனா வைரஸுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற வேண்டும். மீண்டும் நல்ல நாட்கள் வரும். நாம் மீண்டும் நமது உறவுகளுடனும் நண்பர்களுடனும் சந்திப்போம் என்று பிரிட்டன் ராணி 2-ம் எலிசெபத் மக்களுக்கு உரையாற்றினார்.

பிரிட்டன் மக்களுக்கு ராணி எலிசெபத் உரையாற்றுவது மிகவும் அரிதான நிகழ்வாகும். இதற்கு முன் கடந்த 1991-ம் ஆண்டில் வளைகுடா போரின்போதும், 1997-ம் ஆண்டு இளவரசி டயானா மறைவின்போதும், 2002-ம் ஆண்டு 2-ம் எலிசபெத்தின் தாயார் மறைவின்போதும் ராணி உரையாற்றினார். அதன்பின், கடைசியாக 2012-ம் ஆண்டில் தனது வைரவிழாவின்போது ராணி 2-வது எலிசபெத் உரையாற்றினார். அதன்பின் 8 ஆண்டுகளுக்குப் பின் தற்போது ராணி மக்களிடம் பேசியுள்ளார்.

உலகை ஆட்டிப்படைக்கும் கரோனா வைரஸ் பிரிட்டனையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை கரோனா வைரஸால் 47 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்து 934 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் நேற்றுகூட 621 பேர் உயிரிழந்தனர்.

இந்த கரோனா வைரஸின் பிடியிலிந்து வெளிவந்துவிட வேண்டும் என்ற தீவிரத்தில் மக்கள் இருக்கிறார்கள். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார்.

இதுபோன்ற இக்கட்டான சூழலில்தான் ராணி 2-ம் எலிசபெத் தனது வின்ட்சர் கேஸ்டில் அரண்மனையில் மக்களுக்கு உரையாற்றினார். 4 நிமிடங்கள் மட்டுமே பேசிய 93 வயதாகும் ராணி எலிசபெத் மக்களுக்கு நம்பிக்கையூட்டினார்.

பிரிட்டன் ராணி 2-ம் எலிசபெத் : படம் உதவி | ட்விட்டர்

அவர் பேசியதாவது:

''கரோனா வைரஸின் தாக்கத்தால் உலகமே மிகப்பெரிய வலியில், துயரத்தில், நிதிச் சிக்கலில் இருக்கிறது என்பதை அறிவேன். கரோனாவை ஒழிக்க வேண்டும் என்ற பொதுவான நோக்கத்தில் உலகம் ஒன்றிணையும் என நான் நம்புகிறேன்.

கரோனா வைரஸுக்கு எதிரான சவாலை நாம் எவ்வாறு எதிர்கொண்டு வென்றோம் என்பதை ஒவ்வொருவரும் பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் ஆண்டாக இது இருக்கும்.

இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் வலிமையானவர்கள் என்று பிரிட்டனில் நமக்குப் பின்னால் வரக்கூடியவர்கள் சொல்வார்கள். சுய ஒழுக்கம், நல்ல ஆரோக்கியமான நகைச்சுவை, சக மக்களின் உணர்வுகளைப் புரிந்து நடத்தல் போன்றவை நாட்டின் பண்புகளாக இன்றும் இருக்கின்றன.

சவாலான நேரம் என எனக்குத் தெரிந்ததால் நான் உங்களிடம் பேசுகிறேன். நாட்டை மிகவும் சோதனைக்குள்ளாக்கிய கரோனா வைரஸால், அனைவரும் வேதனைப்படுகிறோம். பலர் பொருளாதாரச் சிரமங்களையும், அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றங்களையும் சந்திக்கிறார்கள் .

இந்தக் கடினமான நேரத்தில் மக்கள் பணியாற்றும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன். கரோனா வைரஸால் பலர் அன்புக்குரியவர்களை இழந்திருக்கிறார்கள். அவர்களின் வேதனையைப் புரிந்துகொண்டேன்.

இந்தச் சவாலான நேரத்தை நாம் தாங்கிக்கொள்ள வேண்டும். நல்ல காலம் திரும்பும். நமது நண்பர்களுடனும், குடும்பத்தாருடனும் மீண்டும் நாம் இணைவோம். மீண்டும் சந்திப்போம். கரோனா வைரஸுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம்''.

இவ்வாறு ராணி எலிசபெத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x