

கரோனா வைரஸ் நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் நேற்று நள்ளிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
போரிஸ் ஜான்ஸனுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 10 நாட்களுக்கு முன்பே உறுதி செய்ய்பட்டாலும், தொடர்ந்து தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் நேற்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது மிகவும் சோர்வாகவும், பரிதாபமான நிலையிலும் தனது வீட்டுஅறையிலிருந்து வெளியேறி மருத்துவமனைக்குச்சென்றார்.
இது குறித்து பிரதமர் அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “ கரோனா வைரஸ் நோய் தொற்றுக்கான அறிகுறிகள் தொடர்ந்து இருந்ததால் பிரதமர் ஜான்ஸன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது மருத்துவரின் ஆலோசனைப்படி எடுக்கப்பட்ட முடிவுதான். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே ஜான்ஸன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தேசிய சுகாதாரத்துறையினர் அனைவரும் சிறப்பாக மக்களுக்காக பணியாற்றி வருகிறீர்கள், தொடர்ந்து மக்கள் வீட்டுக்குள்ளே இருக்கும் படி அறிவுறுத்தி மக்களின் உயிரைக் காக்க வேண்டும் என போரி்ஸ் ஜான்ஸன் ேகட்டுக்கொண்டார்” எனத் தெரிவித்தார்
பிரதமர் போரிஸ் ஜான்ஸனுக்கு கரோனா வைரஸ் இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டதையடுத்து, வீட்டில் சுயதனிமையில் இருந்து வந்தார். அவ்வப்போது தனது உடல்நிலை குறித்து தகவல்கள் ஜான்ஸன் சமூக வலைதளத்தில் தெரிவித்து வந்தார்.
ஆனால், ஜான்ஸனுக்கு தொடர்ந்து காய்ச்சல் விட்டு, விட்டு வந்ததால் அவரால் சுயதனிமையிலிருந்து வெளியேற முடியவில்லை. இதனால் தொடர்ந்து வீட்டுக்குள்ளே இருப்பதாக தனது வீடியோ செய்தியில் தெரிவித்திருந்தார்
இதனால் அடுத்து நடக்கும் கரோனா வைரஸ் தொடர்பான கூட்டத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் டோமினிக் ராப் நடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டது