

கரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவில் கடந்த 14 நாட்களில் 7 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். வரும் நாட்களில் இது மேலும் மோசமாக இருக்கும் என அமெரிக்க நிபுணர்கள் எச்சரித்துள்னர்.
சீனாவை மையமாகக் கொண்டு பரவத் தொடங்கிய கரோனா உலக நாடுகள் முழுவதிலும் வியாபித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் மிக மோசமான விளைவுகளை கரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தான் தற்போது கரோனா தாக்குதல் உச்சத்தை தொட்டுள்ளது. அங்கு 2.77 லட்சம் பேரை வைரஸ் தாக்கி இருக்கிறது. இதுவரை 7,406 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் மட்டும் 1,480 பேர் உயிரிழந்தனர். கரோனா நோய் தாக்குதலால் அமெரிக்காவின் பொருளாதாரம் கடும் பாதிப்பை சந்திக்கும் என்று பொருளாதார ஆய்வு நிறுவனமான ‘மார்க்கன் ஸ்டான்லி’ என்ற அமைப்பு கூறியுள்ளது.
மேலும் கடந்த 14 நாட்களில் 7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது வரும் நாட்களில் இன்னும் மோசமான விளைவை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மே இறுதிக்குள் 8 லட்சம் பேர் வேலையை இழப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓட்டல்கள், பார்கள், சில்லறை விற்பனைக் கடைகளில் வேலை செய்வோர்தான் அதிக அளவில் வேலையை இழந்துள்ளனர்.
கடந்த 20 நாட்களில் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இல்லாதோர் சதவீதம் 3.5 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று அமெரிக்க ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் மால்கள், தியேட்டர்கள், ஸ்டோர்களில் வேலை செய்வோர் அதிக அளவில் தங்களது வேலைகளை இழந்துள்ளனர்.
இதுவரை அமெரிக்காவில் 66 லட்சம் பேர் தற்போது தங்களுக்கு வேலை இல்லை என பதிவு செய்துள்ளனர். மே 8-ம் தேதிக்குள் இது 1.1 கோடியாக உயரும் எனத் தெரிகிறது. இதனால் அந்த நாடு மிக மோசமான பொருளாதார விளைவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.