

பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 441 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 7,560 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, “பிரான்ஸில் சனிக்கிழமை மட்டும் கரோனா வைரஸுக்கு 441 பேர் பலியாகினர். இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 7,560 - ஆக அதிகரித்துள்ளது. இதில் 5,532 பேர் மருத்துவமனைகளில் பலியாகி உள்ளனர். 2,028 பேர் முதியோர் முகாம்களில் மரணமடைந்துள்ளனர்.
பிரான்ஸில் 28, 143 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 6,000- க்கும் அதிகமானவர்கள் தீவிர சிகிச்சையில் உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் கரோனா தொற்று பரவல் தீவிரமாக இருந்ததன் காரணமாக மார்ச் 15 ஆம் தேதி முதல் அங்கு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் 190 நாடுகளில் நோய்த் தொற்றை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 12 லட்சத்துக்கும் அதிகமானவர்கல் உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 64,734 பேர் பலியாகினர்.
கரோனா வைரஸுக்கு அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன.