ஆஸ்திரேலியாவில் கரோனா தொற்று பாதிப்புகளுக்கிடையே உணவளிக்கும் சீக்கியத் தன்னார்வலர்கள்

ஆஸ்திரேலியாவில் கரோனா தொற்று பாதிப்புகளுக்கிடையே உணவளிக்கும் சீக்கியத் தன்னார்வலர்கள்
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு நீடிக்கிறது. இந்த நிலையில் அங்கு உணவுக்காகத் தவிக்கும் மக்களுக்கு ஒரு சீக்கியக் குழு உதவி வருகிறது

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் 190 நாடுகளில் நோய்த் தொற்றை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 11,17,860 பேர் உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 59,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

கரோனா வைரஸுக்கு அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன. இதனால் பெரும்பான்மையான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆதரவற்றவர்கள் மற்றும் வறுமையில் உள்ளவர்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய தன்னார்வ அமைப்புகள் உதவி வருகின்றன.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உணவில்லாதவர்களின் தேவையை ஒரு சீக்கியக் குழு பூர்த்தி செய்து வருகிறது.

இருபது தன்னார்வலர்கள் கொண்ட இந்தக் குழு வேன் ஒன்றில் விக்டோரியா மாகாணத்தை வலம் வந்து ஒரு நாளைக்கு 800 பேருக்கு உணவு வழங்கி வருகிறது.

இந்தக் குழுவைச் சேர்ந்த மன்பிரித் சிங் கூறும்போது, “இதனை நாங்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டோம். உணவு தேவைப்படுவர்களுக்கு உணவு அளித்து வருகிறோம். ஆதரவற்றவர்கள், வயதானவர்கள் ஆகியோருக்கு உணவளித்து வருகிறோம்” என்றார்.

ஆதரவற்றவர்களுக்கு உதவும் இந்த சீக்கிய தன்னார்வக் குழுவுக்கு ஆஸ்திரேலியாவில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

ஆஸ்திரேலியாவில் கரோனா வைரஸுக்கு 5,550 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 பேர் பலியாகியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in