

இயற்கைப் பேரழிவு, போர் அல்லது சுகாதாரம் தொடர்பான நெருக்கடி என, ஒரு நாடு நெருக்கடியைச் சந்திக்கும் எல்லாத் தருணங்களிலும் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை மக்கள்தான். பொருளாதார ரீதியிலோ, பிற வகைகளிலோ எந்தவிதமான பாதுகாப்பும் அற்றவர்கள் என்பதால்தான் இந்த நிலையை அவர்கள் எதிர்கொள்ள நேர்கிறது.
ஆனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவிவரும் நோயான ‘கோவிட்-19’, இளவரசர் முதல் பரம ஏழை வரை, முதியவர் முதல் இளைஞர் வரை சகலரையும் பாதிக்கும் என்று நிரூபித்திருக்கிறது. எனினும், ஏழைகளும், எளிதில் இலக்காகும் நிலையில் இருப்பவர்களும்தான் இதில் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள். அதிவேகமாகப் பரவும் இந்தத் தொற்றுநோய், ‘2030-ம் ஆண்டுவாக்கில் நிலையான வளர்ச்சிக்கான இலக்கு’ எனும் பாதையில் மிகக் கடுமையான முட்டுக்கட்டையை ஏற்படுத்தப் போகிறது எனும் செய்தியே இதன் தீவிரத்தை உணர்த்தப் போதுமானது.
இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க, பல நாடுகள் தங்கள் எல்லைகளையும் தொழில் நிறுவனங்களையும் மூடியிருக்கின்றன. பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நாட்டின் சுகாதார நிலவரத்தைப் பொறுத்து, அந்தந்த நாடுகளின் மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ளவும், சமூக விலக்கத்தைக் கடைப்பிடிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். அத்தியாவசியமான சேவைகளுக்கு மட்டும்தான் அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. முதியோர்கள், உடல்நலப் பிரச்சினைகள் கொண்டவர்கள்தான் இந்த வைரஸ் தொற்றுக்கு அதிகம் இலக்காவதுடன், இறக்கவும் நேரிடுகிறது என்று இந்த வைரஸின் தன்மையைப் பற்றி ஆராய்ச்சி செய்துவரும் உலக அளவிலான சுகாதார அமைப்புகள் எச்சரிக்கின்றன.
இந்த வைரஸின் பிடியிலிருந்து இந்த உலகம் விடுபட, முழு அடைப்புகள் அவசியமானவைதான். அதேசமயம், தேவைகளுக்காகக் காத்திருப்பவர்கள் இதனால் ஆபத்தையும் எதிர்கொள்ள நேர்கிறது. உதாரணத்துக்கு, பள்ளியில் கிடைக்கும் மதிய உணவே தினசரி பசியாறுவதற்கான ஒரே வழி எனும் நிலையில் இருக்கும் குழந்தைகள், பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் மிக மோசமான நெருக்கடியில் உள்ளனர். ஏழைகளுக்காக நடத்தப்படும் சூப் கிச்சன் (Soup kitchen) எனும் உணவகங்களும் இந்த முழு அடைப்பைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது. இவற்றில் சில மூடப்பட்டிருக்கின்றன.
திறந்திருக்கும் சில உணவகங்களிலும் உணவுகளை வாங்கிச் செல்ல மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. குளிர்காலம் இன்னமும் நீடிக்கும் நாடுகளில், சூப் கிச்சன்களுக்குள் சென்று உடலைக் கதகதப்பாக்கிக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்த ஏழைகளுக்கு, இப்போது உள்ளே செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. மிகவும் வறிய நிலையில் இருப்பவர்களுக்கு உதவும் தன்னார்வலர்களும் முன்பைப் போல வெளியில் அதிகம் நடமாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
யாருக்கெல்லாம் சாத்தியமோ அவர்களெல்லாம் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும், மருந்தகங்களுக்கும் சென்று டாய்லட் பேப்பர், கிருமிநாசினி, கையுறைகள், முகக்கவசங்கள், உணவுப் பொருட்கள், மருந்துகள் போன்றவற்றை வாங்கிச்சென்று வீட்டில் பத்திரப்படுத்திவிட்டனர். வசதி இல்லாத ஏழைகள் எதையும் வாங்க முடியாததால், இன்றைக்குக் கையிருப்பில் பொருட்கள் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
கோவிட்-19 நோயை எதிர்கொள்வதில் கயானா அரசின் நடவடிக்கை துரிதமானதும் அல்ல, விரிவானதும் அல்ல. கடந்த வாரம், கயானாவில் ஐந்து பேருக்குக் கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. மார்ச் 30-ல், இந்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்திருக்கிறது. எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்ட விஷயம்தான் என்றாலும், இவ்விஷயத்தில் கயானா அரசைப் போலவே பொது சுகாதார அமைச்சகமும் உடனடி நடவடிக்கை எடுக்காமல் சுணக்கம் காட்டியிருக்கிறது.
மார்ச் 30-ல், ‘கோவிட்-19’ நோய்க்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக கயானாவின் மூன்று பிரதேசங்கள் அறிவித்தன. ‘ரீஜியன் 10’ (Region Ten) பிரதேசம், இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை அறிவித்திருக்கிறது. அதன்படி, அத்தியாவசியப் பணிகளைச் செய்பவர்களைத் தவிர மற்ற அனைத்துக் குடிமக்களும் காலை 5 மணி முதல் மாலை 8 மணி வரை பொது இடங்களுக்குச் செல்லக் கூடாது. சூப்பர் மார்க்கெட்டுகள், மருந்தகங்கள் தவிர மற்ற அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. உணவகங்கள், பார்கள் ஆகியவை உணவுகளை வீடுகளுக்கு விநியோகிக்கலாம் அல்லது வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்ல அனுமதிக்கலாம்.
பார்கள், நைட் க்ளப்புகள், அழகு நிலையங்கள் உள்ளிட்டவற்றை மூடுமாறு நியூ ஆம்ஸ்டர்டாம் நகரக் கவுன்சில் மார்ச் 29-ல் அறிவித்தது. சூப்பர் மார்க்கெட்டுகளும், மளிகைக் கடைகளும் மாலை 4.30 மணிக்கு மூடப்பட வேண்டும் என்றும், ஒருவர் பின் ஒருவராக வந்து வாங்கிச் செல்லும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
மார்ச் 28 முதல், இரண்டு வாரங்களுக்கு வீட்டிலேயே இருக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார், பார்ட்டிகா நகரின் மேயர். கடைகள், அத்தியாவசியமான சேவைகள் செயல்படும் என்றாலும், அவசியத் தேவைகளின்றி பொதுமக்கள் அநாவசியமாக வெளியில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. துரதிர்ஷ்டவசமாகவோ அல்லது அலட்சியத்தாலோ, இந்த மூன்று பிரதேசங்களின் அரசுகளும், இந்த நடவடிக்கையால் பாதிப்பை எதிர்கொள்ளும் வாய்ப்புள்ள வணிக நிறுவனங்களுக்கு, குறிப்பாகச் சிறிய அளவிலான கடைகளுக்கு எந்தவித நிவாரண நடவடிக்கையையும் அறிவிக்கவில்லை.
சில கடைகள் மிகச் சிறிய அளவிலான வணிகம் செய்பவை என்பதால், இரண்டு வாரங்களுக்குத் தங்கள் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் உள்ளன. ஒரே ஒருவர் சொந்தமாக நடத்தும் கடைகளைப் பொறுத்தவரை, அவற்றின் உரிமையாளர்கள் தங்கள் குடும்பத்துக்கான வருமானத்தை இழக்கும் நிலையில் இருக்கின்றனர். சில கடைகளின் உரிமையாளர்கள், மிகவும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதால் அக்கடைகள் நிரந்தரமாக மூடப்படும் நிலையும் உள்ளது.
மார்ச் 30-ல், ஏழைகள், விளிம்புநிலையில் இருப்பவர்களுக்காக மூன்று மாதங்களுக்கான சிறப்பு நிவாரண நடவடிக்கைகளை ஜமைக்கா நாட்டின் அரசு அறிவித்திருக்கிறது. இதன்படி, பிச்சைக்காரர்களுக்குக்கூட தேவையான பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. நம் நாட்டின் ஏழை மக்களுக்காக ஏன் இதுபோன்ற நிவாரண நடவடிக்கைகளை யாருமே அறிவிக்கவில்லை?
“இவை மிகச் சிறந்த மற்றும் மிக மோசமான காலங்கள். ஞானத்தின் காலமும் இதுதான், முட்டாள்தனத்தின் காலமும் இதுதான்” என்று சார்லஸ் டிக்கென்ஸ் சொல்வதை இங்கு நினைவுகூர வேண்டியிருக்கிறது.
நிச்சயம் இது இருளின் பருவம்தான் என்று நமக்குத் தெரியும். நமது ஒளியின் பருவம் வரும் என்று நாம் காத்திருப்போம்!
நன்றி: ‘ஸ்டாபுரோக் நியூஸ்’- தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கயானாவிலிருந்து வெளியாகும் நாளிதழின் தலையங்கம்.
தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்