

கரோனா வைரஸ் காற்றில் பரவாது என்று முதலில் கூறப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர் விடும் மூச்சுக்காற்றிலும், பேசும்போதும் மற்றவர்களுக்குப் பரவும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்து அரசுக்கு எச்சரித்துள்ளனர்.
அதனால் அமெரிக்க மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் கரோனா அறிகுறி இருப்பவர்கள் மட்டும்தான் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டாய நிலை மாறி, அனைவருமே அணிந்திருத்தல் நலம் என்ற கருத்து வந்துள்ளது
கரோனா வைரஸ் காற்றில் பரவாது, பாதிக்கப்பட்ட நோயாளி இருமும்போதும், தும்மும்போதும் வெளிவரும் நீர்த்துளிகள் மூலம் பரவும். அந்த நீர்த்துளிகள் பட்ட இடத்தைத் தொடும்போது பரவும் என்று கூறப்பட்டது. ஆனால், அமெரிக்காவில் உள்ள தேசிய சுகாகார அமைப்பு நடத்திய ஆய்வில் பாதிக்கப்பட்டவர் பேசும்போதும், விடும் மூச்சுக்காற்றின் மூலமும் பரவும் வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோய் பிரிவுத்துறையின் தலைமை விஞ்ஞானி அந்தோனி பாஸி கூறுகையில், “ முகக்கவசம் அணிவது குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்படும். சமீபத்தில் கிடைத்த ஆய்வுத் தகவலின்படி கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும்போதும், தும்மும்போதும் மட்டுமல்ல அவர்கள் பேசும்போதும், அவர்கள் விடும் மூச்சுக்காற்று மூலம்கூட எதிராளிகளுக்குக் காற்றில் பரவக்கூடும் எனத் தெரியவந்துள்ளது.
ஆதலால், எங்களின் அதிகாரபூர்வ அறிவுரை என்பது பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் முகக்கவசம் அணிவதோடு, அனைவரும் அணிந்திருந்தால் கரோனா வராமல் தடுக்கலாம். இது தொடர்பாக தேசிய அறிவியல் அகாடமி தனது ஆய்வு முடிவுகளை வெள்ளை மாளிகைக்கு 1-ம் தேதி அனுப்பியது. அதைத் தொடர்ந்து இந்த அறிவுரைகளை அளிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
அமெரிக்காவின் நேஷனல் சயின்ஸ் அகாடமி ஆய்வு அறிக்கையின்படி, “கரோனா வைரஸ் பரவல் குறித்து இன்னும் முழுமையாக எங்கள் ஆய்வுகள் முடியவில்லை. ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் விடும் சுவாசக்காற்று, பேசுதல் மூலம் எதிராளிகளுக்குப் பரவும் சாத்தியம் இருப்பது தெரியவந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
ஆனால், அமெரிக்க சுகாதாத்துறை மக்களுக்கு வெளியிட்ட அறிவுரையின்படி கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மும்போதும், இருமும்போதும் வெளிவரும் நீர்த்துளிகள் படாதவாறு ஒரு மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இனிமேல் தனது அறிவுரைகளில் மாற்றம் கொண்டுவரும்.
சமீபத்தில் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசன் வெளியிட்ட தகவலின்படி, கோவிட்-19 வைரஸ் காற்றில் குறைந்தபட்சம் 3 மணிநேரம் வரை உயிருடன் இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்ததையும் கருத்தில் கொள்வது அவசியம்.