மிக மோசமான உயிரிழப்பு: விழிபிதுங்கும் அமெரிக்கா: கரோனா வைரஸுக்கு  கடந்த 24 மணிநேரத்தில் 1,480 பேர் பலி

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்: கோப்புப்படம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்: கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனா வைரஸின் கோரப் பிடியில் சிக்கி அமெரிக்கா செய்வதறியாது திகைத்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அமெரிக்காவில் கரோனா வைரஸுக்கு 1,480 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது

கரோனா வைரஸ் பெருந்தொற்றுநோய் உலகில் பரவத் தொடங்கியபின் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒருநாட்டில் உயிரிழப்பது இதுதான் முதல்முறையாகும்

உலகளவில் கரோனா வைரஸ் குறித்து ஆய்வு நடத்திவரும் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் “ கடந்த 24 மணிநேரத்தில் அமெரிக்காவில் மிகமோசமாக கரோனா வைரஸின் பாதிப்புக்கு 1,480 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவில் கரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 406 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா வைரஸ் இந்த உலகில் பரவத்தொடங்கிய பின், மிகமோசமான உயிரிழப்பு இதுவாகும். அமெரிக்காவில் கரோனா வைரஸால் இதுவரை 2 லட்சத்து 77 ஆயிரத்து 161 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள், 2 லட்சத்து 57ஆயிரத்து 486 பேர் மருத்துவமனையில் சிகி்ச்சை பெற்று வருகிறார்கள். 12 ஆயிரத்து 283 பேர் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 32 ஆயிரத்து284 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்” எனத் தெரிவித்துள்ளது.

உலகளவில் கரோனா வைராஸால் பாதி்க்கப்பட்டோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 10 லட்சத்து 98 ஆயிரத்து390 ஆக இருக்கிறது. இன்றைய நாள் முடிவுக்குள் 11 லட்சம் பேரை கடந்துவிடும். கரோனா வைரலாஸின் பிடியில் சிக்கி உலகளவில் 59 ஆயிரத்து159 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஆறுதல் அளிக்கும் விதமாக உலகளவில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 293 பேர் கரோனா வைரஸிருந்து குணமடைந்துள்ளனர்

இதில் மிகமோசமாக பாதிக்கப்பட்டிருப்பது ஐரோப்பிய நாடுகள்தான். இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மட்டும் 40 ஆயிரத்து 768 பேர் உயிரிழந்துள்ளனர். 5 லட்சத்து 74 ஆயிரத்து 525 பேர் கரோனா வைரஸால் ஐரோப்பிய நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் மிக மோசமாக இத்தாலியில் 14 ஆயிரம் பேரும், ஸ்பெயினில் 10ஆயிரத்துக்கு மேற்பட்ட பேரும் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in