Published : 08 Aug 2015 10:20 AM
Last Updated : 08 Aug 2015 10:20 AM

உலக மசாலா: துணி மனிதன்!

பெஞ்சமின் ஷைன் பிரிட்டனைச் சேர்ந்த கலைஞர். வலை போன்ற துணிகளை வைத்து விதவிதமான மனித உருவங்களை உருவாக்குவதில் நிபுணர். சமீபத்தில் நடனமாடும் மனிதர்களைத் துணிகளில் உருவாக்கிக் காட்சிக்கு வைத்திருந்தார். இதற்காக 2 ஆயிரம் மீட்டர் துணிகளைப் பயன்படுத்தியிருந்தார். மிகப் பெரிய அளவில் பாராட்டுகளையும் பெற்றார். தான் உருவாக்க வேண்டிய மாதிரிகளை புகைப்படங்களாக தயார் செய்துகொள்கிறார். பிறகு அவற்றை வைத்து ஓவியத்துக்காகத் திட்டமிடுகிறார். பல வண்ணங்களில் வலை போன்ற துணிகளை வாங்கிக்கொள்கிறார். சுவற்றில் துணியை வைத்து இஸ்திரி பெட்டியால் தேய்க்கிறார்.

வெப்பத்தில் துணி சுருங்கி, கோடுகளாக மாறுகின்றன. இவை பின்னர் முழு உருவங்களாக உருமாற்றம் அடைந்து, பார்ப்பவர்களை அசத்தி விடுகின்றன. மிகவும் சிரமமான கலை இது. தவறாக இஸ்திரியைத் தேய்த்தால் முழுத் துணியும் வீணாகிவிடும். பிறகு மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். பொறுமை அளவுக்கு அதிகமாகத் தேவைப்படும். துணிகளை மடித்து, சுருக்கி, இஸ்திரி போட்டுச் செய்து முடிப்பதற்கு இரண்டரை மாதங்கள் தேவைப்படுகின்றன.

இந்தத் துணி உருவங்களுக்குப் பின்னால் வண்ண விளக்குகளைப் பயன்படுத்தினால் அது வேறொரு விதத்தில் அழகாக இருக்கும். ‘‘என் கலைப் படைப்பை விட, ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு எடுத்துச் செல்வதுதான் மிகவும் கடினமானது. பாதி வேலைகளை என் ஸ்டூடியோவிலும் மீதி வேலைகளைக் கண்காட்சி நடைபெறும் இடங்களிலும் செய்து முடிக்கிறேன்’’ என்கிறார் பெஞ்சமின் ஷைன். சர்வதேச நிறுவனங்கள் இவருடன் இணைந்து கண்காட்சிகளை நடத்த போட்டி போட்டு வருகின்றன.

உங்க பேரைப் போலவே நீங்களும் ஷைனாயிட்டீங்க பெஞ்சமின்!

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இருக்கிறது அர்லண்டா விமான நிலையம். இங்கே உலகில் மற்ற எந்த விமான நிலையங்களிலும் இல்லாத ஒரு புதுமை செய்யப்பட்டிருக்கிறது. அதாவது உலகில் எந்த மூலைக்குச் சென்றாலும் அங்கே தற்போது நிலவும் பருவ நிலையை அறிந்துகொள்ளும் வசதியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதற்காக மூன்று அறைகள் இருக்கின்றன. குளிர் மிகுந்த நாடுகளுக்குச் செல்பவர்கள், அந்த நாட்டின் தட்பவெப்ப நிலையைத் திரையில் பார்க்கலாம். குளிரை உணரலாம். காற்றின் சத்தத்தைக் கேட்கலாம்.

வெப்ப நாடுகளுக்குச் செல்பவர்கள் வெப்பத்தை உணர்ந்துகொள்ளலாம். இவ்வாறு அறிந்துகொண்டு, குளிருக்குத் தேவையான கம்பளி, ஜெர்கின் உடைகளை வாங்கிக்கொண்டு செல்லலாம். வெப்ப நாடுகள் என்றால் அதற்கேற்ற பருத்தி ஆடைகள், சூரியக் கண்ணாடிகள் வாங்கிக்கொண்டு பயணிக்கலாம். மிக மோசமான பருவநிலை என்றால், அதைத் தாங்கிக்கொள்ள இயலாதவர்கள் பயணத்தைச் சற்றுத் தள்ளி வைக்கலாம். மே 29 அன்று இந்த பருவநிலை அறியும் அறைகள் திறக்கப்பட்டன. இதுவரை 40 ஆயிரம் பேர் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அறிவியலும் தொழில்நுட்பமும் எவ்வளவு வேகமாக வளர்கின்றன!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x