Published : 03 Apr 2020 10:57 AM
Last Updated : 03 Apr 2020 10:57 AM

கரோனா புயலை எப்படி கடத்தப் போகிறது டோக்கியோ?

டோக்கியோவில் ‘கோவிட்-19’ நோயாளிகளின் எண்ணிக்கை 10 நாட்களில் நான்கு மடங்காக அதிகரித்திருக்கும் நிலையில், தேசிய நெருக்கடி நிலையை ஜப்பான் அரசு எப்போது அறிவிக்கும் என்பதே முக்கியக் கேள்வியாக உள்ளது.

கணிசமாக அதிகரித்துவரும் நோயாளிகளை எதிர்கொள்ள, தலைநகரம் தயாராக இருக்கிறதா என்று அதிகாரிகளும் நிபுணர்களும் அஞ்சுகிறார்கள். மருத்துவமனைகள் நிரம்பி, சுகாதார அமைப்பே நிலைகுலையும் அளவுக்கு நிலைமை மிக மோசமாகலாம் என்று கருதும் அவர்கள், அந்தச் சூழல் ‘எல்லை கடந்த’ ஒன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள். டோக்கியோவிலோ நாட்டின் பிற பகுதிகளிலோ அப்படியான நிலை இன்னமும் ஏற்பட்டுவிடவில்லை என்று அதிகாரிகள் கூறிவந்தாலும், ஆபத்து எந்த நேரத்திலும் நிகழலாம் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

தடுமாறும் தலைநகரம்

“அப்படியான ஒரு கடுமையான சூழலுக்கு, டோக்கியோவின் மருத்துவமனைகள் தற்போது தயாராக இல்லை” என்கிறார், சர்வதேச சுகாதாரம் மற்றும் சமூக நலப் பல்கலைக்கழகப் பேராசிரியரும், அரசின் ‘கோவிட் -19’ நிபுணர் குழுவின் உறுப்பினருமான கோஜி வடா.

“இன்றைய சூழலைப் பொறுத்தவரை, பொது நிதியில் உருவாக்கப்பட்ட மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் நோயாளிகளை அனுமதிக்கும் முடிவில் டோக்கியோ பெருநகர நிர்வாகம் தீர்மானமாக இருக்கிறது. ஆனால், இப்போதே அந்த மருத்துவமனைகள் சோர்வுக்கான அறிகுறிகளை வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. கணிசமாக அதிகரித்துவரும் நோயாளிகளை அம்மருத்துவமனைகளால் கையாள முடியாது” என்கிறார் கோஜி வடா.

மார்ச் 30 நிலவரப்படி, கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க தங்களிடம் 500 படுக்கைகள் இருப்பதாகக் கூறியிருக்கும் டோக்கியோ பெருநகர நிர்வாகம், அவற்றில் 394 படுக்கைகள் நிரம்பிவிட்டன என்றும் தெரிவித்திருக்கிறது. நிலைமை மோசமாவதை உணர்ந்திருக்கும் டோக்கியோ நிர்வாகம், தீவிரமான அறிகுறிகள் கொண்ட நோயாளிகளுக்கு 700 படுக்கைகளையும், லேசான அறிகுறிகளைக் கொண்டவர்களுக்காக 3,300 படுக்கைகளையும் கூடுதலாக ஏற்பாடு செய்ய திட்டமிட்டிருக்கிறது.

நிலைமை தீவிரமடையும்

கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால், ஏப்ரல் 8-க்குள் டோக்கியோவில் 530 பேர் கரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பார்கள் என்று சுகாதார அமைச்சகம் மதிப்பிட்டிருக்கிறது. நோய்த் தொற்று உச்சத்தை அடையும்போது, டோக்கியோவில் மட்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் 700 பேரைப் பராமரிக்க வேண்டியிருக்கும். இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நிமோனியாவுக்காக சிகிச்சையளிக்க வேண்டியிருக்கும்.

“சிகிச்சையளித்தால் காப்பாற்றிவிடலாம் எனும் நிலையில் இருப்பவர்கள்கூட உயிரிழக்க நேரிடும் அளவுக்கு, தலைநகரின் சுகாதார அமைப்பு நிலைகுலைந்து போவதைத் தவிர்க்க வேண்டுமானால், கோவிட் – 19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க ஏதுவாக, தனியார் மருத்துவமனைகளுக்கும், முறைப்படுத்தப்படாத மருத்துவ நிறுவனங்களுக்கும் நிதி உதவியை அரசு செய்ய வேண்டும்” என்கிறார் கோஜி வடா.

தொற்றுக்குள்ளானவர்கள் அதிகரிக்கலாம்

புதிதாக உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் குறித்த அன்றாடச் செய்திகள், வைரஸ் ஏற்கெனவே எப்படிப் பரவியது என்பதைப் பற்றித்தான் பேசுகின்றனவே தவிர, எவ்வளவு வேகமாகப் பரவுகிறது என்பதைச் சொல்வதில்லை. கவலையளிக்கும் இன்னொரு விஷயம் இது.

டோக்கியோவில் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருப்பவர்களில் பலர், இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு முன்பே தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்று தெரியவருகிறது. கரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் வெளிப்படுவதற்கு இரண்டு வாரங்கள் வரை ஆகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

“மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று டோக்கியோ ஆளுநர் யுரிகோ கொய்க்கே கேட்டுக்கொள்வதற்கு முன்னர், புதிதாகத் தொற்றுக்குள்ளானவர்கள் பற்றிய தகவல்கள் இனி வரும் நாட்களில் தெரியவரும்.

மருத்துவ வசதி குறைவு

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, ‘கோவிட்-19’ நோயாளிகளில் 80 சதவீதம் பேர், சிறிய அளவிலான அறிகுறிகளுக்குப் பின்னர், முழுமையாக குணமடைந்துவிடுகிறார்கள்; 15 சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்; மீதம் உள்ள 5 சதவீதம் பேருக்குத்தான் தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது.

ஜப்பானில், குறைந்த எண்ணிக்கையிலான தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளுக்கு, எக்மோ எனப்படும் (ECMO - Extracorporeal Membrane Oxygenation) சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சையளிக்கப்படுகிறது. உயர் தொழில்நுட்பம் கொண்ட இந்தக் கருவி, தீவிரமான நுரையீரல் பிரச்சினைகள், இதய நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.

ஜப்பான் சுவாச நோய் சிகிச்சைக் கழகம் மற்றும் ஜப்பான் மருத்துவப் பொறியாளர்கள் சங்கம் ஆகியவை நடத்திய கூட்டு ஆய்வின் அறிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையின்படி, ஜப்பானில் இப்போது ஏறத்தாழ 1,400 எக்மோ கருவிகள் உள்ளன. ஆனால், அவற்றில் சுமார் 300 கருவிகள்தான் கோவிட்-19 சிகிச்சைக்குத் தயாராக உள்ளன என்று கியோட்டோ மருத்துவப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சடாரு ஹஷிமோட்டோ தெரிவித்திருக்கிறார்.

டோக்கியோவில் கரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கும் 521 பேரில், 16 பேர் தீவிரமான அறிகுறிகளைக் கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழலில், டோக்கியோவில் குறைந்த எண்ணிக்கையிலான வென்டிலேட்டர்களும், 200 சொச்சம் எக்மோ கருவிகளும்தான் இருக்கின்றன என்றும், இவற்றில் மிகக் குறைந்த கருவிகளைத்தான் ‘கோவிட்-19’ சிகிச்சைக்குப் பயன்படுத்த முடியும் என்றும் மார்ச் மாதம் வெளியான அறிக்கை தெரிவிக்கிறது.

தலைவர்கள் பேச வேண்டும்

நிலைமை மோசமடைவதைத் தவிர்க்க, தற்போதைய சூழலின் அவசரத்தை மக்களிடம் எடுத்துச் சொல்ல அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும் என்றும், அப்போதுதான் நிலைமையின் தீவிரத்தை ஜப்பான் மக்கள் உணர்ந்துகொள்வார்கள் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஜப்பான் முழுவதும் நெருக்கடி நிலையைப் பிரதமர் ஷின்சோ அபே அறிவிப்பது பலன் தரும் என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அப்படியான ஓர் அறிவிப்பைப் பிரதமர் வெளியிட வேண்டும் எனும் குரல்கள் அதிகரித்திருக்கின்றன. இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டிராத இந்த நடவடிக்கை மூலம், மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு செய்ய சட்டபூர்வமான அதிகாரம், எல்லா பிரதேச ஆளுநர்களுக்கும் கிடைக்கும்.

அலுவலகக் கட்டிடங்கள், பூங்காக்கள் உள்ளிட்டவற்றை மூடுமாறு உத்தரவிட, ஆளுநர்களுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்; இல்லையென்றால் தண்டிக்கப்படுவார்கள் என்று ஆளுநர்களால் வற்புறுத்த முடியாது. நாடு தழுவிய நெருக்கடி நிலையை அறிவிப்பது, ஆளுநர்களின் அதிகார எல்லையை விரித்துவிடாது என்றாலும், நிலைமையை மக்களிடம் எடுத்துச் சொல்லி எச்சரிக்க அவர்களுக்குப் பெரிய அளவிலான அதிகாரத்தை வழங்கும்.

மேலும், பெரிய தொழில் நிறுவனங்களையும், போக்குவரத்துத் துறையினரையும் அழைத்து, தற்காலிக முழு அடைப்பு குறித்து அறிவுறுத்த முடியும். பொருளாதாரச் சரிவு மிகக் கடுமையானதாக இருக்கும் என்றாலும், தற்போது இருக்கும் சூழலைக் கருதி பல நிறுவனங்களும் அதற்குத் தயாராகவே இருக்கின்றன.

மக்களிடம் மாற்றம் வேண்டும்

மக்களிடம் கடந்த வாரம் பேசிய டோக்கியோ ஆளுநர் யுரிகோ கொய்க்கே, பேரழிவைத் தவிர்க்க வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும், வீட்டிலிருந்தே வேலை பார்ப்பது, வார இறுதிகள் வெளியில் கூடுவதைத் தவிர்ப்பது என்பன போன்ற வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். மார்ச் 30-ல் மீண்டும் இது குறித்துப் பேசிய அவர், வாரம் முழுவதும் அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

“ஒருவேளை, டோக்கியோ நகரில் கரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகின்றவர்களின் எண்ணிக்கை, திடீரென உயர்ந்துவிட்டால் மருத்துவமனைகள் நிரம்பிவிடும்; மக்களின் உயிருக்குப் பேராபத்து ஏற்படும்” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அவரது வேண்டுகோளை மக்கள் ஓரளவுக்குச் செவிமடுத்திருக்கின்றனர் என்று, டோக்கியோ சமூக அறிவியல் பல்கலைக்கழகப் பேராசிரியர் கென்னெத் மெகெல்வாய்ன் கூறியிருக்கிறார். அதேசமயம், தங்கள் பழக்கவழக்கங்களை முழுமையாக மாற்றிக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். “டோக்கியோ ஆளுநர், பிரதமர், பிற அரசியல் தலைவர்கள் என்று எல்லோருமே கரோனா வைரஸ் குறித்த எச்சரிக்கையைப் பலவீனமான முறையில் முன்னெடுத்தது முக்கியக் காரணம். கரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனைகள் அதிக அளவில் நடத்தப்படாதது இன்னொரு காரணம். இதனால், உள்ளூரிலேயே ஒருவரிலிருந்து இன்னொருவருக்குத் தொற்று ஏற்படுவதன் தீவிரத்தை ஜப்பான் மக்கள் இன்னமும் உணரவில்லை. இதுதான் முக்கியப் பிரச்சினை” என்கிறார் கென்னெத் மெகெல்வாய்ன்.

- ருய்சேய் தகாஹாஷி

நன்றி: ‘தி ஜப்பான்டைம்ஸ்’ (ஜப்பான் நாளிதழ்) | தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x