Published : 03 Apr 2020 10:16 AM
Last Updated : 03 Apr 2020 10:16 AM

ஆப்கான் மக்களின் உண்மையான விருப்பங்களில் இந்தியா தலையிடக்கூடாது, தங்கள் முஸ்லிம் சிறுபான்மையினர் உரிமைகளை பாதுகாக்கட்டும்: தலிபான் தலைவர்

ஆப்கானில் வெளியிலிருந்து ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதம் இல்லை என்று கூறும் ஆப்கான் தலிபான் அரசியல் அலுவலக செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் ஆப்கானின் மிகப்பெரிய பிரச்சினை அயல்நாட்டுப் படைகளின் ஆக்ரமிப்பு என்பதே. மேலும் இந்தியா ஆப்கானின் உண்மையான விருப்பங்களில் தலையிடல் கூடாது என்று கூறினார்.

தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் ஆன்லைன் மூலம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

வெளியிலிருந்து ஆதரவு பெறும் பயங்கரவாதம் ஆப்கானில் இல்லை. ஒரு புறம் ஆப்கான் மக்கள், இஸ்லாமிக் எமிரேட் ஆஃப் ஆப்கானிஸ்தான் என்ற விடுதலை இயக்கம் நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடுகிறது. இன்னொரு புறம் ஆக்ரமிப்புப் படைகள். பிரிட்டன் காலனியாதிக்கச் சக்திகளிடமிருந்து இந்திய மக்கள் போராடி சுதந்திரம் பெற்ற பிரகாசமான வரலாறு இருக்கிறது. எனவே உள்நாட்டு விடுதலை இயக்கங்கள் மீது பயங்கரவாதம் என்ற சாயத்தை இந்தியா பூசக்கூடாது” என்றார்.

தலிபான் இயக்கம் தன்னை இஸ்லாமிய எமிரேட் ஆஃப் ஆப்கானிஸ்தான் என்றே அழைத்துக் கொள்கிறது.

இந்நிலையில் ஏப்ரல் 1ம் தேதி மத்திய வெளியுறவு அமைச்சகம், “இந்தியா எப்போதும் ஆப்கான் தலைமை, ஆப்கானுக்கேயுரிய, ஆப்கன் கட்டுப்பாட்டு நடைமுறைகளுடன் கூடிய அமைதியை ஆதரித்து வருகிறது. இதன் மூலமே வெளியிலிருந்து ஸ்பான்சர் செய்யப்படும் பயங்கரவாதத்திலிருந்து மீள முடியும்” என்று கூறியிருந்தது.

இதனையடுத்தே தலிபான் செய்தித் தொடர்பாள ஆப்கானில் வெளியிலிருந்து ஆதரிக்கப்படும் பயங்கரவாதம் இல்லை என்று கூறினார்.

மேலும் மத்திய வெளியுறவு அமைச்சக கூற்றுகளையும் மறுத்த சுஹைல் ஷாஹீன், “இந்த அறிக்கையில் உள்ள வாசகங்களை நாங்கல் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆப்கான் தலைமை, ஆப்கானுக்கேயுரிய போன்ற வாசகங்கள் காபூலில் உள்ள தலைமையைக் குறிப்பதாக உள்ளது. அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட அமைதி ஒப்பந்தத்தின் படி நாங்கள் ஆப்கானுக்கு உள்ளேயே இருக்கும் அமைப்புகளுடன் பேச்சு வார்த்தைகள் நடத்துவோம். இந்த உள் ஆப்கான் அமைப்புகள் காபூல் தலைமை நிர்வாகத்தினால் வழிநடத்தப்படுபவர்கள் அல்ல என்பதுதான் விஷயம். ஆகவே ஆப்கான் மக்களின் உண்மையான விருப்பங்களில் இந்தியா தலையிடுவது சரியாக இருக்காது.” என்றார்.

மேலும் சமீபத்தில் ஐஎஸ் தீவிரவாதம் சீக்கிய குருத்துவாரா மீது நடத்திய கொடூரத் தாக்குதல் பற்றி சுஹைல் ஷாஹின் கூறும்போது, தலிபான் அத்தகைய தாக்குதல்களை ஒரு போதும் ஊக்குவிக்காது. நாங்கள் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களையும் காப்போம். “சிறுபான்மையினர் உரிமைகளுக்காக நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சமீபத்திய சீக்கிய குருத்துவாரா தாக்குதலை நாங்கல் வன்மையாக கண்டித்தோம். அதே போல் இந்தியாவும் தங்கள் முஸ்லிம் சிறுபான்மையிர் உரிமைகளை பாதுகாக்குமாறு வலியுறுத்துகிறோம். அவர்கள் இந்திய குடிமக்கள், உங்கள் மக்கள்” என்றார் சுஹைல் ஷாஹின்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x