Published : 03 Apr 2020 07:13 AM
Last Updated : 03 Apr 2020 07:13 AM

குறைந்த விலை வென்டிலேட்டரை வடிவமைத்து இந்திய பொறியாளர்கள் குழு சாதனை- அமெரிக்க அரசின் தெற்கு மத்திய ஆசியாவுக்கான செயலாளர் புகழாரம்

வாஷிங்டன்

குறைந்த விலை வென்டிலேட்டரை வடிவமைத்த இந்திய பொறியாளர் குழுவுக்கு அமெரிக்க அரசு புகழாரம் சூட்டியுள்ளது.

அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. அந்த நாட்டில் 2,16,722 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5,116 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வென்டிலேட்டர்கள் தேவைப்படுகிறது. ஆனால் மருத்துவமனைகள் நிரம்பி வென்டிலேட்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. வென்டிலேட்டர் இல்லாமல் சுமார் 2 லட்சம் அமெரிக்கர்கள் உயிரிழக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. தற்போதைய நிலையில் அந்த நாட்டில் 7 லட்சம் வென்டிலேட்டர்கள் தேவைப்படுகின்றன.

இந்நிலையில் அமெரிக்க நிறுவனத்துக்காக இந்திய பொறியாளர்கள் குழு குறைந்த விலை வென்டிலேட்டரை வடிவமைத்துள்ளது. இதன்படி குறுகிய காலத்தில் அதிக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்ய முடியும். ஒரு வென்டிலேட்டரை தயாரிக்கரூ.38,000 மட்டுமே செலவாகும். அமெரிக்காவின் எம்ஐடி பல்கலைக்கழகம் புதிய வென்டிலேட்டரை வடிவமைக்க உதவி செய்துள்ளது.

மிகப் பெரிய மாற்றம்

அமெரிக்க அரசின் தெற்கு மத்திய ஆசியாவுக்கான செயலாளர் அலிஸ் ஜி வெல்ஸ் கூறும்போது, "குறைந்த விலை வென்டிலேட்டரை உருவாக்கிய இந்திய பொறியாளர் குழுவுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் புதிய கண்டுபிடிப்பு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கான இந்தியதூதர் தரண்ஜித் சிங் சந்து கூறும்போது, "கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளோம். இந்திய பொறியாளர்கள் வடிவமைத்த வென்டிலேட்டர்கள் மூலம் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x