Published : 02 Apr 2020 10:07 PM
Last Updated : 02 Apr 2020 10:07 PM

பாகிஸ்தானிலும் தப்லிக் ஜமாத் உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதி: முழுமையாக சீல் வைக்கப்பட்ட ராய்விந்த் நகரம் 

பாகிஸ்தானைச் சேர்ந்த தப்லிக் கி ஜமாத் உறுப்பினர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருக்கும் பல்வேறு ஜமாத் உறுப்பினர்களும் பரிசோதிக்கப்பட்டு தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் ஒட்டுமொத்த ராய்விந்த் நகரத்தையும் தனிமைப்படுத்தியுள்ளது பாகிஸ்தான் அரசு. அனைத்து விதமான கடைகளும் மூடப்பட்டு, நகரத்துக்குள்ளேயும், நகரத்திலிருந்து வெளியேறும் பொதுமக்களின் நடமாட்டமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தப்லிக் ஜமாத் போதகர்கள் 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதே போல, ஜமாத்தை சேர்ந்த ஐந்து நைஜீரிய பெண்கள் உட்பட 50 உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு லாகூருக்கு 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கசூரில் இருக்கும் தனிமை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிந்த் மாகாணத்தில் இருக்கும் ஹைதராபாத் நகரத்தில் தப்லிக் ஜமாத்தைச் சேர்ந்த 38 பேருக்கு தொற்று பரவியிருப்பதாக செய்தி வந்துள்ளது.

மேலும், ஊரடங்கு உத்தரவை மீறியதால், சிந்த் மற்றும் பஞ்சாப் காவல்துறை ராய்விந்த் மர்காஸில் (ஜமாதின் பாகிஸ்தான் பிரிவு தலைமையிடம்) இன்னும் சிலரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மார்ச் மாதம், கூட்டம் கூட்டுவது கிருமி தொற்றை பரப்பலாம் என்ற அரசின் எச்சரிக்கையையும் மீறி தப்லிக் ஜமாத் தங்களது ஆண்டு கூட்டத்தை கூட்டியதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பல்வேறு நாடுகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த கூட்டம் 5 நாட்கள் நடந்தது. ஆனால் பாகிஸ்தான் அதிகாரிகள் இதை ரத்து செய்யக்கோரி முன்னரே அறிவுறுத்தியுள்ளனர்.

"அரசு அச்சப்பட்டது தற்போது நிஜமாகியிருக்கிறது. சில தப்லிக் ஜமாத் உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தான் அதன் பரவுலுக்குக் காரணமாகியுள்ளனர்" என லாஹூர் நகரின் துணை காவல்துறை ஆணையர் தனிஷ் அஃப்ஸல் தெரிவித்துள்ளார். மேலும் ராய்விந்த் தப்லிக் ஜமாத் மார்கஸ் கட்டிடத்தில் தற்போது 600 போதகர்கள் தஞ்கியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

"சுகாதார குழு இதுவரை அங்கிருந்த 110 பேரை பரிசோதித்துள்ளது. அதில் 41 போதகர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செயப்பட்டுள்ளது. ராய்விந்த் பகுதிக்குள்ளும், வெளியே போக நினைப்பவர்களின் நடமாட்டமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு காவல்துறை, பாதுகாப்புத்துறை அதிகாரிகள் காவலில் உள்ளனர்" என்று கூறியுள்ளார். இன்னும் சில ஜமாத் போதகர்கள் மசூதிகளிலும், பல்வேறு மாவட்டத்தில் இருக்கும் அவர்களது மையங்களிலும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் தனிஷ் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் மட்டுமல்ல, இந்தியா, மலேசியா, ப்ரூனே ஆகிய நாடுகளிலும் தப்லிக் ஜமாத் உறுப்பினர்களே கரோனா கிருமி தொற்றை பரப்பியவர்களாகப் சந்தேகிக்கப்படுகிறார்கள்.

இந்தியாவில் ஊரடங்கை மீறி கூட்டத்தை நடத்தியதற்காக ஜமாத் கடும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது. தெற்கு டெல்லியின் நிஜாமுதீன் மர்காஸில் கடந்த மாதம் ஜமாத் கூட்டத்தில் பங்குபெற்ற 53 பேருக்கு இதுவரை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் காஸாவில் கரோனா தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட நோயாளிகள் இருவரும் பாகிஸ்தானில் தப்லிக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்றவர்கள். பாகிஸ்தானில் வியாழக்கிழமை மதியம் வரை கரோனா தொற்று இருப்பவர்கள் எண்ணிக்கை 2,250 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. 32 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர். பஞ்சாபில் அதிகபட்சமாக 845 பேருக்கும், சிந்த் மாகாணத்தில் 709 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-க்யூ கட்சி, தப்லிகி ஜமாத்துக்கு தனது ஆதரவை தெரிவித்ததோடு அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் கண்டனம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் சட்டமன்ற சபாநாயகர், பர்வேஸ் இலாஹி, ஜமாத்துக்கு எதிரான பிரச்சாரம் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த ஜமாத்தின் போதகர்கள் எங்கும் குழப்பம் ஏற்படுத்தியதில்லை என்றும், அதன் உறுப்பினர்கள் அமைதியின் தூதர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மசூதிகளிலிருந்து கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள ஜமாத் உறுப்பினர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டு மற்ற மசூதிகளுக்கோ, தப்லிகி மையங்களுக்கோ மாற்றப்பட்டு, தனிமைபடுத்தப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கான உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-க்யூ கட்சியின் தலைவரும் போலீஸ் நடவடிக்கையை கண்டித்து, ஜமாத் உறுப்பினர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x