Last Updated : 01 Apr, 2020 01:50 PM

 

Published : 01 Apr 2020 01:50 PM
Last Updated : 01 Apr 2020 01:50 PM

இத்தாலியின் பேரிழப்புக்கு என்ன காரணம்?

இன்றைய தேதிக்குக் கரோனா வைரஸால் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்திருக்கும் நாடு இத்தாலி. அந்நாட்டில் மொத்தம் 12,428 பேர் கரோனா வைரஸுக்குப் பலியாகியிருக்கிறார்கள். கரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது இத்தாலி (அமெரிக்கா 1,88,578; இத்தாலி 1,05,792). ஆனால், அமெரிக்காவைவிட நான்கு மடங்கு அதிகமான இத்தாலியர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

தவிர, கரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் சராசரியாக 3.4 சதவீதம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்று உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டிருக்கும் நிலையில், இத்தாலியில் அது 10 சதவீதத்தைத் தொட்டுவிட்டது. அந்நாட்டில் கரோனா பாதிப்பின் தீவிரத்தை இந்தத் தரவுகள் உணர்த்துகின்றன. எப்படி இத்தனை மோசமான பாதிப்பு இத்தாலிக்கு ஏற்பட்டது?

பரிசோதனையில் இடைவெளி
ஜனவரி 31-ல், இத்தாலிக்கு வந்திருந்த சீனாவைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகளுக்குக் கரோனா வைரஸ் தொற்று இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. அடுத்த சில நாட்களில், கரோனா வைரஸின் பிறப்பிடம் என்று கருதப்படும் சீனாவின் வூஹான் நகரிலிருந்து நாடு திரும்பிய இத்தாலிக்காரர் ஒருவருக்குக் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அந்த நபருக்குச் சில நாட்களிலேயே உடல்நலன் தேறியதால், மருத்துவமனையிலிருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சீனாவிலிருந்து வந்த இருவருக்குக் கரோனா தொற்று இல்லை என்று பின்னர் அறிவிக்கப்பட்டது.

பிப்ரவரி 20-ல், லம்பார்டி பிராந்தியத்தில் உடல்நலக் குறைவு என்று மருத்துவமனைக்குச் சென்றவருக்குக் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அவர்தான் இத்தாலியின் முதல் கரோனா வைரஸ் தொற்று நோயாளி என்று பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, பலர் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானதை இத்தாலியால் கண்டறிய முடியவில்லை.

இந்த இடைவெளிதான் இத்தாலியில் கரோனா வைரஸின் பாதிப்பு கடுமையாக இருப்பதற்கு முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக, வடக்கு இத்தாலியின் பல பகுதிகளில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது. எனினும், சாதாரணக் காய்ச்சல் என்று நினைத்தே மருத்துவமனைகளில் அவர்களுக்குச் சிகிச்சையளித்தார்கள் மருத்துவர்கள். இப்படி, கரோனா தொற்று இருந்தாலும் அது கண்டறியப்படாமல் மருத்துவமனைகளில் வெறுமனே காய்ச்சலுக்குச் சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள் பலர். இவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் கரோனா வைரஸ் பரவுவதற்கு மருத்துவமனைகளே இடமளித்துவிட்டன என்று இன்றைக்கு சுகாதாரத் துறையினர் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.

கைகொடுக்காத முன்னெச்சரிக்கை
இத்தனைக்கும், சீனாவில் இப்படி ஒரு வைரஸ் உருவாகியிருக்கிறது; அது மற்ற நாடுகளுக்கும் பரவக்கூடும் என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்துகொண்ட நாடுகளில் இத்தாலியும் ஒன்று. சீனாவிலிருந்து வரும் விமானங்களைத் தடை செய்த முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடும் இத்தாலிதான். ஆனால், இந்த நடவடிக்கைக்குப் பின்னர், சீனாவிலிருந்து இத்தாலிக்கு வந்தவர்கள், இணைப்பு விமானங்களைப் (connecting flights) பயன்படுத்தி வெவ்வேறு நாடுகள் வழியாக இத்தாலியை வந்தடைந்தனர் என்று தெரியவந்திருக்கிறது. அவர்கள் மூலம், கரோனா வைரஸ் கணிசமாகப் பரவியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

அதேபோல், பிப்ரவரி 3-லேயே விமான நிலையங்களில், தெர்மல் கேமரா உட்பட பல்வேறு ஏற்பாடுகளைச் செய்த இத்தாலி அரசு, கரோனா வைரஸ் நுழைந்துவிடாத வகையில் கண்காணிக்கத் தொடங்கியது. இத்தாலியில் முதல் கரோனா தொற்று கண்டுபிடிப்பதற்கு முன்பே, கரோனா பரவலைத் தடுப்பதற்கான சிறப்புக் குழுவையும் அந்நாட்டு அரசு உருவாக்கிவிட்டது. ஆனால், நடைமுறைச் சிக்கல்களால் தீவிரமான கண்காணிப்பை மேற்கொள்ள முடியாமல், கோட்டை விட்டுவிட்டது இத்தாலி.

ஒருவழியாக சுதாரித்துக்கொண்ட இத்தாலி பிரதமர் ஜிசப்பே கான்டே, மார்ச் 9-ல், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தார். அத்தியாவசியமானவை என்று கருதப்படும் தொழில் மற்றும் சேவை நிறுவனங்களைத் தவிர பிற நிறுவனங்களை மூடவும் இத்தாலி அரசு உத்தரவிட்டது. ஆனாலும் விபரீதம் எல்லை மீறிவிட்டது.

வைரஸ் தொற்றின் காரணமாக மோசமான அறிகுறிகளுடன் இருந்தவர்களுக்கு மட்டுமே சிகிச்சையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதனால், கரோனா தொற்றுக்குள்ளான மற்றவர்கள் தீவிர மருத்துவக் கண்காணிப்புக்கு வெளியில் இருக்க நேர்ந்தது. மார்ச் 15 நிலவரப்படி, இத்தாலியில் 1.25 லட்சம் பேருக்குத்தான் கரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால், அதே காலகட்டத்தில் மிகச் சில அறிகுறிகளுடன் வந்தவர்கள் உட்பட 3.40 லட்சம் பேருக்குக் கரோனா பரிசோதனையை தென் கொரியா நடத்தியது. அதனால்தான், தென் கொரியாவில் இறப்பு விகிதம் ஒரு சதவீதத்துக்கும் கீழே சென்றது. இத்தாலியிலோ அது 10 சதவீதத்தைத் தொட்டுவிட்டது.

நிதியின்மை ஏற்படுத்திய நெருக்கடி
இந்தச் சூழலில், இத்தாலியின் சுகாதாரத் துறை பற்றியும் பேச வேண்டியது அவசியம். இத்தாலியில் ‘செர்விஸியோ சானிடாரியோ நேஷனல்’ எனும் பெயரில் தேசிய சுகாதார சேவைத் துறை இயங்கி வருகிறது. இதன் மூலம், இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த கட்டணத்திலோ இத்தாலியின் அனைத்துக் குடிமக்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனினும், நாட்டின் ஜிடிபியில் பொது சுகாதாரத்துக்கு 6.8 சதவீதமே ஒதுக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற நாடுகளைவிட இது மிகக் குறைவு.

தவிர, மருத்துவத் துறை சார்ந்த ஆராய்ச்சிகளுக்கான நிதியும் குறைக்கப்பட்டுவிட்டது. இப்படி, நிதிப் பற்றாக்குறையில், ஏற்கெனவே திணறிவந்த இத்தாலிய சுகாதாரத் துறை இன்றைக்குக் கடும் அழுத்தத்தைச் சந்தித்து வருகிறது.

கரோனா வைரஸ் பரவல் அதிகரித்த நிலையில், மருத்துவமனைகளின் தொற்றுநோய் வார்டுகளின் படுக்கைகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் நடவடிக்கையில் இத்தாலி சுகாதாரத் துறை இறங்கியது. ஆனால், வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றதால், சிகிச்சையில் யாருக்கு முக்கியத்துவம் அளிப்பது என்று முடிவெடுக்க முடியாமல் மருத்துவர்கள் திணறினர்.

முதியோர் கைவிடப்பட்டனரா?
அந்தச் சமயத்தில்தான், கரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதியோர்களை இத்தாலி கைவிட்டுவிட்டதாகப் பரபரப்பான செய்திகள் பரவின. அது முழுமையான உண்மை அல்ல; முடிந்தவரை அனைத்து வயதினருக்கும் சிகிச்சை அளிக்க முயல்கிறோம் என்று மருத்துவர்கள் விளக்கமளித்தார்கள். எப்படி இருந்தாலும், இத்தாலியில் கரோனா தொற்றால் முதியவர்கள் அதிகமாக உயிரிழப்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. கரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் சராசரி வயது 81 என்பதே இத்தாலிக்கு ஏற்பட்ட சிக்கலின் பின்னணியைச் சொல்லிவிடும்.

உண்மையில், மற்ற நாடுகளை ஒப்பிட இத்தாலியில் இறப்பு விகிதம் அதிகரிக்க முக்கியக் காரணம், அங்கு முதியவர்கள் அதிகம் என்பதுதான். அங்கு 23 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். கரோனா தொற்றால் மரணமடைந்தவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள். முதுமை தொடர்பான நோய்கள், எதிர்ப்பு சக்திக் குறைவு என்பன போன்ற காரணிகளால் முதியவர்களை அதிக அளவில் காவு வாங்கிவிட்டது கரோனா.

ஊரடங்கு நீட்டிக்கப்படலாம்
மார்ச் மாதத்தின் இறுதி நாட்களில் இத்தாலியில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில், மார்ச் 31-ல் மட்டும் 812 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இதற்கிடையே, பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால்தான், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருப்பதுபோல் தெரிகிறது என்றும் தகவல்கள் வருகின்றன.

இந்நிலையில், இத்தாலியில் மேலும் இரண்டு வாரங்களுக்காவது ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று தெரிகிறது. அதன் பிறகு இத்தாலியின் இழப்பு குறைந்திருக்குமா எனும் கேள்விக்குத்தான் உறுதியான விடை இல்லை!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x