மாற்றின்ப வலைதள ஹேக்கிங் விளைவால் பல தற்கொலைகள்: கனடா போலீஸ் சந்தேகம்

மாற்றின்ப வலைதள ஹேக்கிங் விளைவால் பல தற்கொலைகள்: கனடா போலீஸ் சந்தேகம்
Updated on
1 min read

ஹேக்கர்களால் ஊடுருவப்பட்ட ஆஷ்லே மேடிசன் (டேட்டிங் வலைதளம்) உறுப்பினர்களின் தகவல்கள் கசியவிடப்பட்டதாக வெளியான செய்திக்கு பிறகு அதன் பின்னணியில் பல பதிவாகாத குற்றங்களும் தற்கொலைகளும் நடந்திருப்பதாக அதிர்ச்சித் தகவலை கனடா நாட்டு போலீஸ் தெரிவித்துள்ளனர்.

ரகசிய விவரங்கள் அம்பலமானதால் பலர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற அதிர்ச்சிகர சந்தேகப் பின்னணியில் கனடா போலீஸ் விசாரணையை நடத்த உள்ளது.

திருமண உறவுக்கு அப்பாற்பட்ட அல்லது மாற்று உறவை ஏற்படுத்த முயல்வோருக்கு பல டேட்டிங் இணையதளங்கள் உலா வருகின்றன. அப்படிப்பட்ட நிறுவனம் தான் ஆஷ்லே மேடிசன்.காம்.

கனடாவிலிருந்து இயங்கும் இந்த இணையதள நிறுவனம் இந்தத் துறையில் நீண்ட ஆண்டுகளாக நீடித்து இயங்கி வருகிறது. பல கோடி உறுப்பினர்கள் உள்ள இந்த இணையதளம் 'டேட்டிங்' பிரிவில் உலக அளவில் 2-வது இடத்தில் உள்ளது. உறுப்பினர்களின் விவரங்கள் வெளிகாட்டாமல் இருப்பதே இந்த தளத்தின் சிறப்பம்சம்.

இந்த இணையதளத்தில் ஊடுருவி டேட்டாக்களை திருடிய அடையாளம் அறியப்படாத ஹேக்கர்கள், டேட்டிங் இணையதளத்தை உடனடியாக மூடாவிட்டால், உறுப்பினர்களின் உண்மையான விவரங்கள் மற்றும் அவர்களது நிர்வாணப் படங்களை வெளியிட உள்ளதாக பகிரங்க மிரட்டலை கடந்த ஜூலை மாதம் விடுத்தனர்.

ஹேக்கர்கள் கையில் சுமார் மூன்று கோடியே 20 லட்சம் வாடிக்கையாளர்களின் பெயர், ஆன்லைன் பணப் பரிவர்த்தணை மூலம் பெறப்பட்ட முகவரிகள் என டேட்டாக்கள் சிக்கின.

இந்த நிலையில், உறுப்பினர்களின் விவரங்களையும் இணையதளம் ஒன்றில் வெளியிட்டுள்ளதாக பிரபல தொழில்நுட்ப வார இதழான வொயர்ட் கடந்த வாரம் செய்தி வெளியிட்டது. இந்த செய்தியால் ஆஷ்லே மேடிஸன் இணையதளத்தின் உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துக்கும், ஆஷ்லே மேடிஸன் விவரங்கள் இணையதளத்தில் அம்பலமானதுக்கு தொடர்பு இருப்பதாக கெனடா நாட்டு போலீஸார் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இருப்பினும் தற்கொலை மற்றும் குற்றச் சம்பவங்களின் விவரங்களை அவர்கள் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in