Published : 01 Apr 2020 07:21 AM
Last Updated : 01 Apr 2020 07:21 AM

கரோனா பாதிப்பால் வூஹானில் இறந்தவர் எண்ணிக்கை என்ன?- கேள்வி எழுப்பும் அஸ்தி கலசங்கள்

வூஹான்

சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸுக்கு சுமார் 2,500 பேர் இறந்ததாக அந்நாட்டு அரசு கூறும் வேளையில், அஸ்திகலசங்களின் நீண்ட வரிசைகளோ, இறந்தவர்கள் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்புகிறது.

சீனாவின் ஹுபெய் மாகாணம் வூஹானில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கரோனா வைரஸ் பாதிப்பு முதன் முதலில் ஏற்பட்டது. இந்த வைரஸ் தொற்று வேகமாக பரவியதில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். வூஹான் நகரில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 2,548 பேர் இறந்ததாக சீன அரசு அறிவித்தது.

இந்நிலையில் இறந்தவர்களின் உடல் சாம்பலை அவர்களின் குடும்பத்தினர் 8 தகன மையங்களில் இருந்து பெற்றுக்கொள்ள கடந்த வாரம் முதல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி ஆயிரக்கணக்கான அஸ்திகலசங்கள் லாரிகளில் ஏற்றப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

கடந்த புதன், வியாழன் ஆகிய 2 நாட்களில் மட்டும் ஒரு தகனமையத்தில் இருந்து 2,500 அஸ்தி கலசங்கள் விநியோகத்துக்காக லாரியில் ஏற்றப்பட்டன. சீன ஊடகமான கைக்ஸின் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றில் சுமார் 3,500 அஸ்தி கலசங்கள் ஓரிடத்தில் வரிசையாக வைக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. ஆனால் இவற்றில் எத்தனை கலசங்களில் சாம்பல் நிரப்பப்பட்டிருந்தது எனத் தெரியவில்லை.

இந்நிலையில் விநியோகிக்கப்படும் அஸ்தி கலசங்களின் எண்ணிக்கை தொடர்பாக தகன மையங்களில் விசாரித்தபோது, 2 தகன மையங்களில் பதில் அளிக்க மறுத்துவிட்டனர். மற்ற 6 தகன மையங்களில், ‘இது தொடர்பான புள்ளிவிவரம் எங்களிடம் இல்லை’ என்றும் ‘இந்த எண்ணிக்கையை வெளியிட எங்களுக்கு அதிகாரம் இல்லை’ எனவும் தெரிவித்தனர்.

எனவே வூஹான் நகரில் கரோனா வைரஸுக்கு 2,548 பேர் இறந்ததாக அரசு கூறினாலும் இறந்தவர் எண்ணிக்கை இதை விட மிக அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த புதன், வியாழன் ஆகிய 2 நாட்களில் மட்டும் ஒரு தகன மையத்தில் இருந்து 2,500 அஸ்தி கலசங்கள் விநியோகத்துக்காக லாரியில் ஏற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x