

கரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக சுமார் 73 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜப்பான் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ்,190-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா, இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.
கரோனா வைரஸ் தொற்று உலக அளவில் சுமார் 7 லட்சம் பேருக்கு ஏற்பட்டுள்ளது. சுமார் 37 ஆயிரம் பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிப்பை அடைந்துள்ள அமெரிக்கா உள்ளிட்ட 73 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜப்பான் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இந்தத் தடை செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது. ஜப்பான் விதித்துள்ள தடையில் அமெரிக்கா, கனடா, தென்கொரியா, சீனா, சிலி, பிரேசில் போன்ற நாடுகளும் இடம்பெற்றுள்ளன. இதனை ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜப்பானில் கரோனா வைரஸுக்கு இதுவரை 1,953 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 56 பேர் பலியாகியுள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக ஜப்பான் 12.6 பில்லியன் டாலர்கள் செலவு செய்திருந்தது. இந்த நிலையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒரு வருடத்துக்கு ஒலிம்பிக் போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.