Last Updated : 28 Aug, 2015 10:59 AM

 

Published : 28 Aug 2015 10:59 AM
Last Updated : 28 Aug 2015 10:59 AM

1965-ல் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போரின்போது காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது: வெளியுறவு அமைச்சக ஆவணம் தகவல்

கடந்த 1965-ம் ஆண்டு போரின் போதே காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது. காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை அமெரிக்கா அப்போது திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது.

கடந்த 1965 ஆகஸ்டில் இந்தியா வுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடும் போர் நடைபெற்றது. அந்த காலகட்டத்தின் முக்கிய ஆவணங்களை அமெரிக்க வெளி யுறவு அமைச்சகம் இப்போது வெளியிட்டுள்ளது.

போர் உக்கிரமாக நடைபெற்ற போது அப்போதைய இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அன்றைய அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சனுக்கு கடிதம் எழுதினார். அதில், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, அங்கு பொதுவாக்கெடுப்பு நடத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்திருந்தார்.

இருநாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்த அதிபர் லிண்டனின் உத்தரவின் பேரில் அமெரிக்க தூதர் பேட்ரிக் மேக்கனாட்டி பாகிஸ்தான் அதிபர் அயூப்கான், வெளியுறவு அமைச்சர் அயூப் அலிகான் பூட்டோ ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

அப்போது அமெரிக்க தூதர் கூறியபோது, காஷ்மீருக்குள் பாகிஸ்தான் படைகள் ஊடுருவிய தால்தான் போர் ஏற்பட்டுள்ளது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

மேலும் காஷ்மீரில் பொதுவாக் கெடுப்பு வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையையும் அமெரிக்கா நிராகரித்தது. பாகிஸ் தானின் மிக நெருங்கிய நட்பு நாடாக அமெரிக்கா இருந்தபோதும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா வின் நிலைப்பாட்டையே ஆதரித்தது.

லாகூர் நகரை கைப்பற்ற இந்திய ராணுவம் நெருங்கிய நேரத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பூட்டோ அமெரிக்க தூதருக்கு தந்தி அனுப்பினார். அதில், ஒரு நகரம் வீழ்வதால் நாங்கள் வீழ்ந்துவிட மாட்டோம். எங்கள் ஆயுதங்கள் தீர்ந்து போனாலும் வெற்று கரங்களுடன் போரிடுவோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இறுதியில் அமெரிக்கா, ரஷ்யாவின் சமரசத்தால் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இருநாடு களுமே போரில் வெற்றி பெற்ற தாக அறிவித்தன. ஆனால் இந்தியா வின் கரமே போரில் ஓங்கி இருந்தது என்று சர்வதேச கண்காணிப் பாளர்கள் தெரிவித்தனர்.

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் தரப்பு தலையீட்டை ஏற்க முடியாது என்று இந்தியா ஆரம்பம் முதலே வலியுறுத்தி வருகிறது. அதனை உறுதி செய்யும் வகையில் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி சில நாட்களுக்கு முன்பு கூறியபோது, காஷ்மீர் விவகாரத்தை இருநாடுகளும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும், எங்களது இந்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x