

ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்பு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சிறையில் கைதிகளுக்கு இடையே பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது.
ஈரானில் கோவிட் காய்ச்சல் பாதிப்புக்கு இதுவரை 41,595 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2,000க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். தொடர்ந்து கோவிட் காய்ச்சலைக் கட்டுப்படுத்த ஈரான் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் நோய்த் தொற்று ஏற்படாமல் இருப்பதைத் தவிர்க்க சுமார் 1 லட்சம் பேரை ஈரான் அரசு விடுதலை செய்தது. இந்த நிலையில் பார்ஸ் மாகாணத்தில் சிறை ஒன்றில் கைதிகளுக்கிடையே பயங்கரக் கலவரம் ஏற்பட்டது.
இதுகுறித்து ஈரான் அரசு ஊடகம் தரப்பில், “ஷிராஸ் நகரத்தில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர். கேமராக்களை உடைத்தனர். இதில் யாரும் சிறையிலிருந்து தப்பிக்கவில்லை. யாருக்கும் காயமும் ஏற்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் கோவிட் காய்ச்சலால் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து கோவிட் காய்ச்சல் பரவலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ஈரானுக்கு உதவ அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முன்வந்த நிலையில் ஈரான் அந்த உதவிகளை மறுத்துவிட்டது.
சீனாவின் வூஹான் நகரில் உருவான கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு இதுவரை உலக அளவில் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.