

கரோனா வைரஸுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று போப் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கோவிட்-19 காய்ச்சலுக்கு சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 30,000 பேர் பலியாகியுள்ளனர். கோவிட்-19 காய்ச்சலுக்கு ஐரோப்பிய நாடுகளான இத்தாலியும், ஸ்பெயினும் அதிக அளவிலான உயிர் பலியைக் கொடுத்துள்ளன.
தொடர்ந்து உலக நாடுகள் இடையே கோவிட்-19 காய்ச்சல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு எதிராக உலக நாடுகள் இணைய வேண்டும் என்று போப் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து போப் பிரான்சிஸ் கூறும்போது, “கரோனா வைரஸுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும். போர்களை நிறுத்திவிட்டு எல்லைகளைக் கடந்து மனிதாபிமான உதவிகளைச் செய்ய வேண்டும். துயரத்தில் இருப்பவர்கள் மீது கவனம் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.