

அமெரிக்காவுக்கு இந்தியக் குழந்தைகள் சார்பில் பரிசாக வழங்கப்பட்டிருந்த அம்பிகா வாஷிங்டன் எனும் யானை, வன உயிரினக் காப்பகத்தில் நேற்று கருணைக் கொலை செய்யப்பட்டது. அந்த யானைக்கு 72 வயதாகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 1948-ம் ஆண்டில் கர்நாடக மாநிலம் கூர்க் வனப்பகுதியில் பிறந்த அம்பிகா யானை கடந்த 1961-ம் ஆண்டு அமெரிக்காவுக்குப் பரிசாக வழங்கப்பட்டது. ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கும் மேலாக அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ஸ்மித்சோனியன் வன உயிரினப் பூங்காவில் இருந்த யானை உடல்நலக் குறைவால் அவதிப்பட்டது. நிற்க முடியாமல் சிரமப்பட்டது.
இதனால் அந்த யானையை கால்நடை மருத்துவர்கள் குழு கருணைக் கொலை செய்தது. வட அமெரிக்காவில் வயதான 3-வது ஆசிய யானையாக அம்பிகா இருந்து வந்தது.
இதுகுறித்து அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சாந்து ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “இந்தியாவின் அன்புப் பரிசான அம்பிகா யானை, அமெரிக்காவிலயே வயதான ஆசிய யானையாக இருந்து வந்தது. உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட அம்பிகா யானை ஸ்மித்சோனியன் தேசியப் பூங்காவில் கருணைக் கொலை செய்யப்பட்டது.
இந்த தேசியப் பூங்காவிற்கு வந்த பின் லட்சக்கணக்கான மக்களை மகிழ்வித்துள்ளது. அனைவராலும் அம்பிகா யானை விரும்பப்பட்டது. இப்போது அதனை இழந்து வாடுகிறோம்'' எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து ஸ்மித்சோனியன் தேசியப் பூங்கா வெளியி்ட்ட அறிக்கையில், “கடந்த 1948-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கூர்க் வனப்பகுதியில் பிறந்த அம்பிகா யானையை 8 வயதில் வனத்துறையினர் பிடித்துப் பழக்கினர். 1961-ம் ஆண்டு அந்த யானை இந்தியக் குழந்தைகள் சார்பில் பரிசாக வழங்கப்பட்டது.
சாப்பிடும் நேரத்தில் அம்பிகா செய்யும் சேட்டைகளைப் பார்க்கவே வேடிக்கையாக இருக்கும். கடந்த 50 ஆண்டுகளாக இந்திய மக்களுக்கும், அமெரிக்க மக்களுக்கும் பெரும் இணைப்புப் பாலமாக, அன்பின் தூதராக இருந்து வந்தது. ஆசிய யானைகள் குறித்த அமெரிக்க ஆய்வாளர்கள் குறித்த பல்வேறு ஆய்வுகளுக்கு அம்பிகா யானை பயன்பட்டது மட்டுமல்லாமல் ஒத்துழைத்தது.
ஆனால், வயது முதுமை காரணமாக அம்பிகா யானையின் வலது கால் எலும்புகள் வலுவிழந்தன. இதனால் அவ்வப்போது வலியால் துடித்தது. மேலும், காலில் புண் உருவாகி தொடர்ந்து நடமாடுவதிலும், நிற்பதிலும் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து அம்பிகா யானைக்கு விடை கொடுக்கும் வகையில் கால்நடை மருத்துவர்கள் குழு கருணைக் கொலை செய்தனர்” எனத் தெரிவிக்கப்பட்டது