

கரோனா வைரஸுக்கு அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 2,000த்தைக் கடந்தது. அமெரிக்காவில் மொத்த கரோன நோயாளிகளில் பாதி நியூயார்க் நகரத்தில் இருப்பதையடுத்து அமெரிக்காவில் கரோனா மையமாகியுள்ளது நியூயார்க் நகரம்.
நியூயார்க்கில் மொத்தம் 50,000 பேர் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை நிலவரப்படி கரோனா மரணம் 2010 ஆகியுள்ளது, பெரும்பாலான மரணங்கள் நியூயார்க் நகரில் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியில் பலி எண்ணிக்கை 10,023 ஆகவும் ஸ்பெயினில் 5,812, சீனாவில் 3,299, பிரான்சில் 2.314 பேர் இதுவரை பலியாகியுள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் உறுதி செய்யப்பட்ட கரோனா கேஸ்கள் 1,21,000 ஆகும். ஒரேநாளில் 21309 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நியூயார்க் ஒட்டுமொத்தத்தையும் தனிமைப்படுத்த பரிசீலித்து வருவதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால் நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ க்யுமோ இது தொடர்பாகக் கூறும்போது, நகரையே ஒட்டுமொத்தமாக தனிமைப்படுத்துவது சட்ட ரீதியாக அமல் செய்ய முடியாதது என்றார். மேலும் இதனால் மருத்துவ ரீதியாக என்ன சாதிக்க முடியும் என்பதும் தெரியவில்லை என்றார்.