

சுகாதாரப் பணியாளர்களுக்கும் கரோனாவை எதிர்த்துப் போராடுபவர்களுக்கும் உளவியல் சிகிச்சை கட்டாயத் தேவை என்று செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
கரோனா வைரஸால் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் 300 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் லாக் டவுன் காரணமாக வீடுகளிலேயே உள்ளனர்.
இதனால் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் தேவை அதிகமாக உள்ளது. பணி நேரம் முடிந்த பிறகும் அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதைக் குறிப்பிட்டுப் பேசிய சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஜெகன் சபகைன், ''வைரஸைக் கட்டுப்படுத்தும் முக்கியமான நேரத்தில் உளவியல் சிக்கல் பெரிதான காரணி இல்லை. என்றாலும் லட்சக்கணக்கான மக்களை அச்சுறுத்தும் மனவியல் பிரச்சினையை எளிதாக எண்ணி விட்டுவிடக் கூடாது.
இதனால் சமூக-உளவியல் பிரச்சினைகள் குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்துள்ளன. அவற்றுக்கும் மனநலத் தேவைகளுக்கும் உரிய கவனம் அளிக்கப்படாத பட்சத்தில் அதுவே பெரிய கொல்லி நோயாக மாறிவிடும்.
அதிக அழுத்தம் ஏற்பட்டால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்துவிடும். இது அவர்களின் உடல் நலத்தையும் சமூக உறவுகளையும் கடுமையாக பாதிக்கும். இந்த சூழலில் சமூக- உளவியல் ஆதரவு கட்டாயத் தேவை'' என்று கூறியுள்ளார்.
அதேநேரத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் பிரான்செஸ்கோ ரோக்கா கூறுகையில், ''தனிமைப்படுத்தப்பட்ட மக்களிடையே கோபம், அழுத்தம், பதற்றம் உள்ளிட்ட மனம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும். இதனால் அவர்களிடையே தற்கொலை எண்ணம் தலைதூக்கும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே இவற்றுக்கு உரிய கவனம் கொடுத்து, சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.