5 நிமிடங்களில் கரோனா பரிசோதனை: அமெரிக்க ஆய்வகம் கண்டுபிடிப்பு

5 நிமிடங்களில் கரோனா பரிசோதனை: அமெரிக்க ஆய்வகம் கண்டுபிடிப்பு
Updated on
1 min read

அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வகம், கரோனா வைரஸ் தொற்றைக் கண்டுபிடிக்க 5 நிமிடங்களில் பரிசோதனை முடிவுகளை அறிவிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப் படைத்துவருகிறது. இதற்கிடையே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், விரைவான கரோனா பரிசோதனை இயந்திரங்களைக் கண்டுபிடிக்க நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கின.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வக நிறுவனமான அபாட் லெபாரட்டரீஸ், 5 நிமிடங்களில் கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பதைக் கண்டறிய முடியும் என்று தெரிவித்துள்ளது,

இதுதொடர்பாக அபாட் தலைவரும், சிஓஓவுமான ராபர்ட் ஃபோர்ட் கூறுகையில், ''சிறிய டோஸ்டர் இயந்திரத்தின் அளவில் இது இருக்கும். மூலக்கூறு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. தொற்று இல்லையென்றாலும் 13 நிமிடங்களில் முடிவுகள் தெரியும்.

சிறிய இயந்திரம் என்பதால் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். மருத்துவமனையின் நான்கு சுவர்களுக்குள் மட்டுமே வைக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்கள் மற்றும் சுகாதார மையங்களில் அவசரத் தேவைக்காக இதைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தின் ஆரம்பத்தில் இந்தப் பரிசோதனை இயந்திரம் விற்பனைக்கு வரும்'' என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜெர்மனியைச் சேர்ந்த ராபர்ட் பாஷ் நிறுவனம், கரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகளை இரண்டரை மணி நேரத்தில் கிடைக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்திருப்பதாக அறிவித்திருந்தது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 5.9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in