2 லட்சம் கோடி டாலர் நிதி; ராணுவம் மூலம் நாடு முழுவதும் மருத்துவமனை; கரோனாவை வெல்ல அமெரிக்கா முழு சக்தியையும் பயன்படுத்தும்: அதிபர் ட்ரம்ப் சூளுரை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்: கோப்புப்படம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்: கோப்புப்படம்
Updated on
2 min read

கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு எதிரான போரில் அமெரிக்கா முழு சக்தியையும் பயன்படுத்தி வெற்றி பெறும். மக்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் வழங்கி உலகப் பெருந்தொற்று நோயை எதிர்த்துப் போராடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சூளுரைத்துள்ளார்

கரோனா வைரஸால் உலக வல்லரசு நாடானா அமெரிக்கா கலங்கி நிற்கிறது. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மட்டும் ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், நேற்று ஒரேநாளில் 18 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் நேற்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

''உலகப் பெருந்தொற்று நோயான கரோனா வைரஸை எதிர்த்து அமெரிக்கா போரிடுவதற்கு மருத்துவ வசதிகளும், வளங்களும் தேவை என்பதை உணர்ந்து என்னுடைய அரசு புதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உலகில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொடூரமான சேதங்களை கரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது.

ராணுவத்தில் உள்ள பொறியாளர்கள் மூலம் நாடு முழுவதும் மருத்துவமனைகள அமைப்போம். அடுத்த 100 நாட்களில் ஒரு லட்சம் கூடுதல் செயற்கைசுவாகக் கருவிகளைப் பெறுவோம்.

கரோனா வைரஸுக்கு எதிரான போரில் வெல்லும் வரை தொடர்ந்து அமெரிக்க அரசு முழுவலிமையையும் இறக்கி பணியாற்றுவோம்.

அமெரிக்காவின் பொருளாதார, அறிவியல், மருத்துவ, ராணுவ, உள்நாட்டு பாதுகாப்பு அனைத்தையும் பயன்படுத்தி இந்த கரோனா வைரஸை ஒழிப்போம்.

இதற்காக செயற்கை சுவாசக் கருவிகளைத் தயாரிக்கும் ஜெனரல் எலெக்ட்ரிக்ஸ், பிலிப்ஸ், மெட்ரோனிக், ஹேமில்டன், ஜோல், ரெட்மெட் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய அரசு பேச்சு நடத்தி வருகிறது.

போயிங் விமானத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டேவ் கால்கன், நாடு முழுவதும் நிவாரணப் பொருட்கள் மருத்துவப் பொருட்களைக் கொண்டு செல்ல ட்ரீம்லிப்டர் எனும் மிகப்பெரிய சரக்கு விமானத்தை வழங்க இருக்கிறார். மருந்துப்பொருட்களை கொண்டு செல்வதற்காகவே 3 விமானங்கள் வழங்கப்படுகின்றன.

உலகில் எங்கும் இல்லாத வகையில் நாள்தோறும் ஒருலட்சம் பேருக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை செய்து வருகிறோம். அடுத்த இரு வாரங்களில் இது அதிகரித்து, உலகில் அதிகமான மருத்துவப் பரிசோதனை செய்யும் நாடாக நாங்கள் மாறுவோம்.

அமெரி்க்க மக்களை கரோனா வைரஸிலிருந்து மீட்க 2 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் நிதித்தொகுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளேன்’’.

இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in