

கரோனா பரிசோதனை முடிவுக்காக நாள் கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை. வெறும் இரண்டரை மணிநேரத்தில் பரிசோதனை முடிவுகளைப் பெறலாம்.
கோவிட்-19 பரிசோதனை முடிவுகளை விரைவில் தரும் நிறுவனங்களின் பட்டியலில் ராபர்ட் பாஷ்ஸும் (Robert Bosch) அண்மையில் இணைந்துள்ளது. விவலிட்டிக் மாலிக்குலர் கண்டுபிடித்தல் வகையில் (Vivalytic molecular diagnostics platform) பாஷ் நிறுவனத்தின் சுகாதாரப் பாதுகாப்புப் பிரிவு இதை உருவாக்கியுள்ளது.
ஏற்கெனவே காய்ச்சல் மற்றும் நிமோனியா உள்ளிட்ட பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளைக் கண்டறிய பாஷ் நிறுவனம் குறிப்பிட்ட இயந்திரத்தைப் பயன்படுத்தி வருகிறது. அதில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாகவும், வரும் ஏப்ரல் 1-ம் தேதி ஜெர்மனியில் சோதனை இயந்திரம் வெளியாகும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாஷ் நிறுவன சிஇஓ வாக்மர் டென்னர் கூறுகையில், ''பாதிக்கப்பட்ட நோயாளிகள் இதன் மூலம் விரைந்து கண்டுபிடிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவர். 6 வாரங்களில் இதை உருவாக்கி உள்ளோம்.
வழக்கமான இரண்டு நாட்கள் எடுத்துக் கொள்ளும் கரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகள், இனி இரண்டரை மணி நேரத்தில் கிடைக்கும். இந்த விரைவுப் பரிசோதனையை ஒரே நேரத்தில் 10 பேருக்குச் செய்ய முடியும். 95 சதவீதத்துக்கும் அதிகமான துல்லியத்துடன் இது செயல்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், விரைவான கரோனா பரிசோதனை இயந்திரங்களைக் கண்டுபிடிக்க நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளன.