

கரோனா போன்ற பெருந்தொற்றை மைக்கேல் ஜாக்சன் கணித்திருந்தார் என்று அவரின் முன்னாள் மெய்க்காப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனிடம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மெய்க் காவலராக இருந்தவர் மேட் ஃபிட்டஸ். அவர் மைக்கேல் ஜாக்சனுக்கு கரோனா போன்ற பெருந்தொற்று நோய் குறித்த ஊகம் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக 'தி சன்' நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ''இயற்கைப் பேரழிவு வரும் என்பதை மைக்கேல் ஜாக்சன் உணர்ந்திருந்தார்.
மக்கள் அனைவரும் கொத்துக் கொத்தாக இறக்க வேண்டிய சூழல் எப்போது வேண்டும் ஏற்படலாம் என்றும் ஒற்றைக் கிருமி உலகம் முழுக்கப் பரவும் என்றும் அவர் கணித்திருந்தார்.
அவர் பல்வேறு நாடுகளுக்குத் தொடர்ந்து பயணித்து வந்தார். மேற்குறிப்பிட்ட காரணங்களாலேயே அவர் மாஸ்க்கை அணிந்து வந்தார். பல்வேறு தரப்பினரால் கேலிக்குள்ளானபோதும் அவர் அதை விடவில்லை.
'நான் உடல்நிலை சரியில்லாமல் படுத்து, ரசிகர்களை வருத்தப்பட வைத்துவிடக் கூடாது. நான் ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் பூமியில் பிறந்திருக்கிறேன். நான் ஆரோக்கியத்துடன் இருந்தாக வேண்டும்' என்று மைக்கேல் அடிக்கடி கூறுவார்.
அவர் அப்போது அச்சப்பட்டது இப்போது நடந்துவிட்டது என்று நினைக்கிறேன்'' என மேட் தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஆசிய நாடான சீனாவில் தொடங்கிய கரோனா தொற்று, உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப் படைத்து வருகிறது. இதனால் உலகம் முழுவதும் 4,71,538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21,296 பேர் உயிரிழந்துள்ளனர்.