

கரோனா வைரஸ் குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் வரலாம் என்று அமெரிக்காவின் தலைசிறந்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் தொற்று நோய்களுக்கான ஆய்வுப் பணிக்குத் தலைமை தாங்குபவர் அந்தோணி ஃபாசி. அவரே இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அந்தோணி இது தொடர்பாகக் கூறும்போது, ''இப்போது தெற்கு ஆப்பிரிக்காவிலும் புவியின் தென்கோளப் பகுதியில் உள்ள நாடுகளிலும் கரோனா பரவத் தொடங்கியுள்ளதைக் காண முடிகிறது. அவர்கள் தற்போது குளிர்காலத்தை நோக்கிப் பயணித்து வருகின்றனர்.
ஒருவேளை அங்கும் கடுமையாக தொற்று பரவினால், இரண்டாவது முறையாக நாம் கரோனா வைரஸைப் பெறுவதைத் தவிர்க்க முடியாது. இதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.
இதற்கு, கரோனா தடுப்பூசியைத் தயாரித்து, விரைவாக அதைப் பரிசோதித்து, அடுத்த கரோனா சுழற்சி வருவதற்குள் நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இப்போதே கரோனாவை ஒழிப்பதில் நாம் வெற்றி அடைவோம் என்று எனக்குத் தெரியும். என்றாலும் அடுத்த சுழற்சிக்கு நாம் நிஜமாகவே தயாராக இருக்க வேண்டும்'' என்று அந்தோணி தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸுக்குத் தனியாக இதுவரை எந்தவொரு மருந்தும், தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை. அண்மையில் கரோனாவுக்கு எதிராக முதல் முறையாக மனிதர்களுக்கு தடுப்பூசிப் பரிசோதனை அமெரிக்காவில் தொடங்கியது. இந்தத் தடுப்பூசியின் பெயர் எம்ஆர்என்ஏ- 1273 ஆகும். இதை அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் விஞ்ஞானிகள் தயாரித்து வருகின்றனர். இவர்களுடன் கேம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த மாடர்னா எனும் பயோடெக்னாலஜி நிறுவனப் பணியாளர்களும் இணைந்துள்ளனர்.
அதேபோல கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் பரிசோதனை சீனாவிலும் தொடங்கியுள்ளது. சீனாவின் ராணுவ மருத்துவ அறிவியல் அகாடமி விஞ்ஞானிகள் மனிதர்களுக்குத் தடுப்பு மருந்தைச் செலுத்தி தடுப்பூசியைக் கண்டறிய ஒப்புதல் பெற்றுள்ளனர்.
உலக சுகாதார நிறுவனம் அடுத்த ஆண்டின் இறுதி வரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி சந்தைக்கு வராது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.