

கரோனா பாதிப்பின் மையமாக மாறும் நிலையில் அமெரிக்கா உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கரோனா தொற்றின் பிடியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்காவில் 42 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக 10,000 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 150 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இதனால் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். கரோனா பணிகளில் தேசியக் காவல்படை ஆயுதப் படையினர் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
நியூயார்க் நகரில் மட்டும் புதிதாக 53 பேர் மரணம் அடைந்துள்ளனர். புதிதாக 5,000 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கை அடுத்து நியூஜெர்சி, கலிபோர்னியா, மிச்சிகன் இல்லினாய், புளோரிடா ஆகியவை கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய உலக சுகாதார நிறுவன செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ், ''கடந்த 24 மணிநேரத்தில் உலகம் முழுவதும் 85 சதவீதம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 40 சதவீதம் பேர் அமெரிக்காவில் இருந்து மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் கரோனா பாதிப்பு மிக அதிகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கரோனா பாதிப்பின் மையமாக மாறும் திறனை அமெரிக்கா பெற்றுள்ளது. எனினும் சில நல்ல நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. நுணுக்கமான, விரிவான பரிசோதனைகள், தீவிரமான தனிமைப்படுத்தல், அவர்களின் தொடர்புகளைக் கண்டுபிடித்தல் ஆகியவையும் அமெரிக்காவில் துரிதமாக நடைபெறுகிறது.
இந்த இக்கட்டான சூழலில் அமெரிக்கர்கள் ஒருவருக்கொருவர் உதவுவதைப் பார்க்கும்போது மிகவும் நெகிழ்வாக உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.