

உங்களுக்கும் கரோனா இருப்பதைப் போல் நடந்துகொள்ளுங்கள் என்று பொதுமக்களுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதையும் ஆட்டிப் படைத்து வருகிறது. கரோனாவுக்கு உலக அளவில் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதிலும் 1 மாத ஊரடங்கை ஜெசிந்தா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர், ''வீட்டுக்கு வெளியே அனைத்துத் தொடர்புகளையும் விட்டுவிட வேண்டும். வீட்டுக்குள்ளேயே இருப்பது நல்லது. முக்கியத்துவம் இல்லாத சேவைகள் அனைத்தையும் முடக்கியுள்ளோம்.
பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் ஆகியவை ஒரு மாத காலத்துக்கு மூடப்படுகின்றன. வைரஸ் சங்கிலியை உடைத்து, பரவலைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
அடுத்த வாரங்களில் தொற்று இன்னும் அதிகரிக்கலாம். நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று உங்களுக்குக் கேள்விகள் எழுகிறதா, ஒரே ஒரு விதியைப் பின்பற்றுங்கள். உங்களுக்கு கரோனா வந்து விட்டதைப் போல் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்.
உங்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் அடுத்தவருக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள்'' என்று பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.