Published : 24 Mar 2020 02:01 PM
Last Updated : 24 Mar 2020 02:01 PM

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலாவுக்கு கரோனா வைரஸ் இல்லை

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலாவுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று முதற்கட்டப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கரோனா, உலக நாடுகள் முழுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜெர்மனியில் இதுவரை கரோனாவால் 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த இரண்டு பேருக்கு மேல் பொது இடத்தில் கூட ஏஞ்சலா மெர்க்கல் தடை விதித்துள்ளார்.

இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை அன்று, பாக்டீரியா தொற்றுக்கு எதிராக (pneumococcus bacteria) தடுப்பூசி போட மருத்துவர் ஒருவர், மெர்க்கலைச் சந்தித்தார். மருத்துவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மெர்க்கல் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து 65 வயதான ஏஞ்சலா மெர்க்கலுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் அவருக்குக் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று முதற்கட்டப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாகச் செய்தி ஊடகங்களிடம் பேசிய ஏஞ்சலாவின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபன் செபர்ட், ''இன்றைய பரிசோதனை முடிவில் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு கரோனா பாதிப்பு இல்லை. இரண்டாவது பரிசோதனை விரைவில் எடுக்கப்படும்.

தற்போது கரோனா வைரஸ் அறிகுறிகள் எதுவும் மெர்க்கலாவிடம் இல்லை. அவர் நலமுடன் இருக்கிறார். வீட்டில் இருந்தபடியே நாட்டுப் பணிகளைக் கவனித்து வருகிறார்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x