

யுகேவில் 2 பேருக்கு மேல் கூடத் தடை விதித்தும் 3 வாரங்களுக்கு லாக் டவுன் செய்தும் பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார்.
சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.
இதற்கிடையே யுகேவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,650 ஆக உயர்ந்துள்ளது. 335 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், யுகே பிரதமர் போரிஸ் ஜான்சன் 3 வாரங்களுக்கு லாக் டவுன் செய்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக நாட்டு மக்களிடையே பேசிய அவர், ''பிரிட்டிஷ் மக்களுக்கு எளிய உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அது மக்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்பதே.
வீடுகளுக்கிடையே வைரஸ் பரவலை நாம் தடுக்க வேண்டும். மருத்துவத் தேவைகள், உணவு, உடற்பயிற்சி ஆகிய தேவைகளுக்கு மக்கள் வெளியே செல்லலாம். எனினும் துணிக்கடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள், விளையாட்டு மையங்கள், வழிபாட்டுக் கூடங்கள் ஆகியவை மூடப்படும்.
3 வாரங்களுக்குப் பிறகு நிலவும் சூழலைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும். அதுவரை சீரான கண்காணிப்பில் நாடு இருக்கும். இதை தேசிய அவசர நிலையாகக் கருதி மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும், நம்முடைய உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
இது கடினமான ஒன்றுதான். ஆனாலும் எளிதான வழி எதுவும் இல்லை. இதை மக்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.