Published : 24 Mar 2020 12:11 PM
Last Updated : 24 Mar 2020 12:11 PM

கரோனாவைப் பரப்பியதற்காக 20 லட்சம் கோடி டாலர்கள் அபராதம்: சீனா மீது அமெரிக்க வழக்கறிஞர் வழக்கு

கரோனாவைப் பரப்பியதற்காக 20 லட்சம் கோடி டாலர்கள் அபராதம் அளிக்க வேண்டும் சீனா மீது அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார்.

டெக்சாஸைச் சேர்ந்த வழக்கறிஞர் லாரி க்ளேமேன். இவர், அமெரிக்க மாவட்ட நீதிமன்றமான மேற்கு டெக்சாஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், ''கரோனா வைரஸ் சீனாவால் உருவாக்கப்பட்டது. உலகப்போருக்கான ஆயுதமாக அதை உருவாக்கி, வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சீனா, அமெரிக்க சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டம், ஒப்பந்தம், விதிமுறைகளை மீறிவிட்டது.

அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் சீனாவின் எதிரி என்று கருதப்படும் பிறரைக் கொல்ல சீனா, தனது ஆய்வகத்துக்குள் வைரஸை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

கோவிட்-19 வைரஸ் இயல்பில் மிகவும் அபாயகரமானது. மனிதனுக்கு மனிதன் தன் இயல்பைப் பிறழ்வாக்கிக் கொள்வது. எளிதிலும் வேகமாகவும் பரவக்கூடியது. இந்தப் புதிய நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

கரோனா வைரஸ் ஃப்ளூவை விட, 10 மடங்கு அபாயகரமானது. உலகின் அதிக மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த சீனாவால் இது தயாரிக்கப்பட்டுள்ளது.

கரோனா உலகம் முழுவதும் 3 லட்சத்துக்கு மேற்பட்ட மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கரோனாவை உருவாக்கி, வெளியிட்ட சீன அரசு இதற்காக 20 லட்சம் கோடி டாலர்களை அபராதம் அளிக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸால் உலகம் முழுவதும் 14,652 பேர் பலியாகியுள்ளதாகவும் 3,34,981 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x