

கரோனா வைரஸ் தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் ராணுவ வீரர்கள் பலர் ரிட்டையர்மெண்ட் ஹோமில் உள்ள முதியோர்களை கவனிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்களுக்கு காத்திருந்த அதிச்சி என்னவெனில் அது போன்ற முதியோர் இல்லத்தில் நோயினால் பாதிக்கப்பட்டு, கைவிடப்பட்ட முதியோர்கள் சிலர் அனாதையாக படுக்கையிலேயே இறந்து கிடந்ததே.
முதியோர் இல்லத்தை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யும் பணி ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் கைவிடப்பட்ட முதியோர்கள் 12 பேர் பரிதாபமாக அனாதையாக இறந்து போயுள்ளது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சியடைந்த ஸ்பெயின் பாதுகாப்பு அமைச்சர் கூறும்போது, “இந்த நாட்டில் முதியோர்களை இப்படி நடத்துபவர்கள் மீது கண்டிப்புடன் இருக்கப் போகிறோம், ராணுவம் சில இடங்களில் சென்று பார்த்தபோது, முற்றிலும் கைவிடப்பட்ட முதியோர்கள் சிலரைப் பார்த்துள்ளனர், சிலர் படுக்கையிலேயே அனாதையாக இறந்ததையும் பார்த்துள்ளனர்” என்றார்.
இது தொடர்பாக விசாரணைக்கு முடுக்கி விடப்பட்டுள்ளது. ஸ்பெயினில் கரோனா பலி எண்ணிக்கை 2,182 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 462 பேர் மரணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஐஸ் பேலஸ் என்ற மேட்ரிட் நகர ஷாப்பிங் மையம் தற்காலிக மார்ச்சுவரியாக மாற்றபப்ட்டுள்ளது என்று மேட்ரிட் நகர செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக மேட்ரிடில் உள்ள 14 பொது மயானங்களில் உடல்களை உள்ளே அனுமதிக்க மறுக்கப்பட்டது, காரணம் போதிய பாதுகாப்பு கவசம் இல்லை என்ற காரணமே.
கரோனா தொற்றுக்கு வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர், அவர்களைப் பாதுகாக்க அரசாங்கங்கள் தனித்துவமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்நிலையில் சில நாடுகளில் கரோனா தொற்று ஏற்பட்டு வரும் அச்சத்தில் முதியோர்களைக் கைவிடும் மனிதாபிமானமற்ற கொடூரங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஸ்பெயினில் இம்மாதிரி நிகழ்வுகளில்தான் 12 முதியவர்கள் முதியோர் இல்லங்களில் கவனிப்பாரின்றி அனாதையாக மரணமடைந்துள்ளது, அங்கு அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதோடு, விசாரணையையும் முடுக்கியுள்ளது.