

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த உலக நாடுகளுக்கு உதவத் தயார் என்று சீன அரசு அறிவித்தள்ளது.
சீனாவின் வூஹான் நகரில்தான் கரோனா வைரஸ் உருவாகி உலக நாடுகளுக்குப் பரவியது. இந்நிலையில் அங்கு கரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 5-வது நாளாக அங்கு புதிதாக வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் யாருமில்லை என்ற முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த நோயைக் கட்டுப்படுத்த உலக நாடுகளுக்கு உதவத் தயார் என்று சீனா அறிவித்துள்ளது.
சீனாவில் கரோனா வைரஸ் பரவல் தடுப்புப்பணியில் ஈடுப்பட்டமருத்துவர்களில் சிலர், வெளிநாடுகளுக்குச் சென்று, அங்குள்ள மருத்துவர்களுக்கு நேரடியாக உதவியளித்து வருகின்றனர்.
சிலர் இணையத்தின் மூலமும், வெளிநாடுகளுடன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மார்ச் 19-ம் தேதி கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான சர்வதேசப் பரிமாற்றக்கூட்டத்தில், ஸொங் நான்ஷான் உள்ளிட்ட புகழ்பெற்ற சீன நிபுணர்கள் பலர், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்களுடன் சீனாவின் அனுபவங்களையும், வழிமுறைகளையும் பகிர்ந்து கொண் டனர்.
மேலும், 4 முறை நடைபெற்ற கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான சீன-ஐரோப்பிய வீடியோ கான்பரன்ஸ் மூலம், ஐரோப்பாவின் அனைத்து நாடுகளுடன் தொடர்புடைய வழிமுறைகள் மற்றும் தகவல்களை சீனா பகிர்ந்து கொண்டுள்ளது. இதுவரை 82 நாடுகளுக்கும், உலகச் சுகாதார அமைப்பு மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியத்துக்கும் உதவியளிக்க உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் வரை தொடர்ந்து உதவியளிக்க சீனா தயாராக உள்ளது என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங் நேற்று கூறும்போது, “19 நாடுகளுக்கு மருத்துவ ரீதியிலான ஆலோசனைகளை வழங்க சீனா முடிவு செய்துள்ளது. கரோனா வைரஸால் சீனா பாதிக்கப்பட்டபோது இந்தியா பல உதவிகளைச் செய்தது. இந்தியாவுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளை சீனா வழங்கும். இது தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களும் தொடர்பில் உள் ளனர்” என்றார். சீனாவில் நேற்று முன்தினம் மட்டும் 9 பேர் இறந்தனர். அவர்களுடன் சேர்த்து இதுவரை 3,270 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 81,093 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,270 பேர் உயிரிழந்ததும் அடங்கும். இவர்களில் சிகிச்சை முடிந்து 72,703 பேர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். 5,120 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சீன தேசிய சுகாதார ஆணையம் நேற்று தெரிவித்தது.
எனினும், கடந்த ஞாயிற்றுக்கிழமை வூஹான் உட்பட உள்நாட்டில் இருப்பவர்களால் யாருக்கும் வைரஸ் பரவவில்லை. ஆனால், வெளிநாடுகளில் இருந்து வந்தவ 39 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. எனவே, வெளிநாடுகளில் இருந்து சீனா வருபவர்களை தனிமைப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் சீன குடிமக்களா அல்லது வெளிநாட்டினரா என்ற தகவலை சீன அரசு வெளியிடவில்லை.
பிரான்ஸில் 674 பேர்
பிரான்ஸில் நேற்று முன்தினம் 112 பேர் கரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தனர். அவர்களுடன் சேர்த்து அந்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 674 ஆக உயர்ந்துள்ளது.- ஏஎப்பி