

கரோனா தொற்று உள்ள மருத்துவரைச் சந்தித்ததால் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்
தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கரோனா, உலக நாடுகள் முழுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜெர்மனியில் இதுவரை கரோனாவால் 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிப்பின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த இரண்டு பேருக்கு மேல் பொது இடத்தில் கூட மெர்க்கல் தடை விதித்துள்ளார்.
இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை அன்று, பாக்டீரியா தொற்றுக்கு எதிராக (pneumococcus bacteria) தடுப்பூசி போட மருத்துவர் ஒருவர், மெர்க்கலைச் சந்தித்தார். தற்போது மருத்துவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், மெர்க்கல் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
65 வயதான ஏஞ்சலா மெர்க்கலுக்கு விரைவில் கரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கரோனா வைரஸ் அறிகுறிகள் எதுவும் மெர்க்கலாவிடம் இல்லை.
ஜெர்மனியில் அரசு ஆய்வகங்கள் மட்டுமன்றி தனியார் ஆய்வகங்களும் கரோனா வைரஸை கண்டறியும் பரிசோதனையை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அந்த நாட்டில் நாளொன்றுக்கு 12,000 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.