

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஐக்கிய அமீரகத்தில் செய்தித்தாள்கள், வார இதழ்கள் என அனைத்தும் சில நாட்களுக்கு நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அமீரகத்தில் கோவிட்- 19 காய்ச்சலுக்கு 153 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து ஐக்கிய அமீரகத்தில் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஐக்கிய அமீரகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் மார்ச் 24 ஆம் தேதி ஐக்கிய அமீரகத்தில் செய்தித்தாள்கள் மற்றும் வார இதழ்கள் நிறுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்த நடவடிக்கை பொது சுகாதார மையங்களால் மக்களுக்கு அளிக்கப்படும் விழிப்புணர்வு நோட்டீஸ்களுக்குப் பொருத்தாது என்று ஐக்கிய அமீரகம் தெரிவித்துள்ளது.
எனினும், ஆன்லைன் மூலம் மக்களுக்கு கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வுகள் அழிக்கப்படும் என்று ஐக்கிய அமீரகத்தின் ஊடகத் துறை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.
கோவிட்-19 காய்ச்சல் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் 3,08,231 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.